கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் 4 ஆம் தேதி 7 கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் அனைத்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இழந்த ஆட்சியை மீண்டும் காங்கிரஸ் பிடிக்குமா? அல்லது மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமருமா என்று இந்தியா மக்கள் உற்று நோக்கியுள்ளனர். நேற்று வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் மூன்றாவது முறையாக பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பாஜக தோற்கடிக்கப்பட்டு, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என கூட்டணி கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, இன்று ஒரே நாளில் மட்டும் 7 ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமெல் புயல், வெப்ப அலை, கருத்துக்கணிப்புகள், தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அடுத்து 100 நாட்களுக்கு செயல்திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன என கூறப்படுகிறது.