Jeya portrait

Advertisment

தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் ஜெயலலிதா படம் நிறுவப்படும் என பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பிப்.12 ம் தேதி முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் பேரவை தலைவர் தனபால் படத்தை திறந்துவைத்தார்.

இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட ஒருவரின் படத்தை பேரவையில் வைப்பது சட்டவிரோதம் என்றும், எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனபாலுக்கு சபாநாயகர் பதவி வழங்கியதால் அதற்கான விசுவாசத்தை காட்டும் வகையில், ஜெயலலிதா படத்தை விதிகளை மீறி சபாநாயகர் திறந்துவைத்துள்ளார் என்பதால் அதை அகற்ற வேண்டுமென திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

திமுக எம்எல்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் "உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைத்தால், காவல் நிலையங்களில் ரவுடிகளின் புகைப்படங்கள் வைக்கும் சூழல் ஏற்படும் எனவும், சபாநாயகரின் உத்தரவு நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது. இந்த வழக்கில் அரசியல் சாசன கேள்வி உள்ளது. அதற்கு இந்த நீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும் எனவும் வாதிட்டார்.

Advertisment

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும். அப்போது வரும் சபாநாயகர் படத்தை அகற்றுவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளட்டும்; சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். மேலும், தனி மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதாலேயே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு குறித்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் மார்ச் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.