திராவிடம் நாடு தழுவியது என சொல்லித்தான் எனது அரசியல் பயணமே தொடங்கியது. கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே என்பதை நம்புகிறவன் நான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை நேற்று மதுரையில் வைத்து வெளியிட்டார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நான் திராவிடத்தையோ தேசியத்தையோ இழந்துவிடவில்லை. திராவிடம் நாடு தழுவியது என சொல்லித்தான் எனது அரசியல் பயணம் தொடங்கியது. கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே என்பதை நம்புகிறவன் நான்.
நீங்கள் இடதா வலதா எனக் கேட்டால் நான் மையத்தில் இருப்பதாக சொல்வேன். கட்சிப் பெயரே அதைத் தெளிவாக உணர்த்துகிறது. சாதி, மத விளையாட்டுகளுக்கெல்லாம் நாங்கள் போவதாக இல்லை. கொள்கை என்னவென்று திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள். இத்தனை காலம் இங்கு எதையெல்லாம் செய்யத் தவறினார்களோ அதுவே எங்கள் கொள்கை. எதெல்லாம் சாதாரண மக்களுக்குக் கூட தெரிந்த கொள்கைகளோ, அதைத் தவிர்த்துவிட்டு புதியவற்றை வியாபாரத்திற்காகக் கொண்டு வந்து மக்களை ஏமாற்றினார்களோ அதெல்லாம் இல்லாததும், மக்களுக்குமானதுமாக இருக்கும் எங்கள் கொள்கை’ என தெரிவித்தார்.
கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட கட்சிக் கொடியில் ஆறு கைகள் இணைந்திருந்தன. வெள்ளை, சிவப்பு மற்றும் கறுப்பு உள்ளிட்ட நிறங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் கமல்ஹாசன், ‘சிவப்பு நிறம் உழைப்பையும், வெண்மை நிறம் நேர்மையையும், கறுப்பு நிறம் திராவிடத்தையும் குறிக்கும். எட்டு முனை நட்சத்திரம் தென்னாட்டு மக்களைக் குறிக்கும். ஆறு கைகள் பாண்டிச்சேரி உட்பட ஆறு மாநிலங்களைக் குறிக்கும்’ என தெரிவித்தார். கமல்ஹாசனின் கட்சிக்கொடி என்.ஜி.ஓ. சாயலில் இருப்பதாக செய்தியாளர் ஒருவர் கூறியபோது, அப்படி இருப்பதில் தவறொன்றும் இல்லையே என கமல்ஹாசன் பேசிமுடித்தார்.