Shashi Tharoor speaks in support of PM Modi after Rahul Gandhi's allegations

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது.

இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புகொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு குறித்தும் விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து வருகிறார். பாகிஸ்தான் உடனான தாக்குதல் நிறுத்தத்திற்கு பின்னால் வர்த்தகம் தொடர்பான எந்த உரையாடலும் டொனால்ட் டிரம்புடன் நடைபெறவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து டிரம்ப்பின் கூற்றை மறுத்த போதிலும், செல்லும் இடங்களில் எல்லாம் வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தான் உடனான மோதலை தடுத்து நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் சுய தம்பட்டம் அடித்து வருகிறார்.

Advertisment

Shashi Tharoor speaks in support of PM Modi after Rahul Gandhi's allegations

இந்த சூழ்நிலையில், டிரம்ப்பிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் காங்கிரஸ் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் தொடக்க விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, “இப்போது எனக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மீது லேசான அழுத்தம் கொடுக்கப்பட்டால், பயத்தால் அவர்கள் ஓடிவிடுவார்கள். மோடிக்கு போன் செய்த டிரம்ப், மோடி என்ன செய்கிறீர்கள், நரேந்திரா சரணடையுங்கள் என்று கூறிய உடனே அவர் சரணடைந்துவிட்டார். 1971 போரில், ஏழாவது கடற்படை அமெரிக்காவிலிருந்து வந்தது. இந்திரா காந்தி, நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்றார். இதுதான் வித்தியாசம். இதுதான் அவரது குணம்; எல்லாரும் இப்படித்தான். சுதந்திர போராட்டத்தில் இருந்தே அவர்களுக்கு சரணடைதல் கடிதங்கள் எழுதும் பழக்கம் இருக்கிறது. டிரம்ப்பிடம் இருந்து ஒரு போன் வந்ததுமே, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சரணடைந்துவிட்டார். அதற்கு வரலாறு சாட்சி. இது தான் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடைய குணம். அவர்கள் எப்போதும் அசைந்து கொடுக்கிறவர்கள். அமெரிக்காவின் அச்சுறுத்தலையும் மீறி இந்தியா 1971 இல் பாகிஸ்தானைப் பிரித்தது. காங்கிரஸ் ஒருபோதும் தலைவணங்கியதில்லை” என்று கூறினார்.

ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் பதிலளித்துள்ளார். இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி அளிப்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து அனைத்து கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் உலக நாடுகளுக்குச் சென்று விளக்கமளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்காவுக்குச் சென்று விளக்கமளித்தனர். அப்போது, பிரதமர் மோடி டிரம்ப்பிடம் சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு குறித்து சசி தரூரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

Advertisment

Shashi Tharoor speaks in support of PM Modi after Rahul Gandhi's allegations

அதற்கு பதிலளித்த சசி தரூர், “எந்த நேரத்திலும் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை. தாக்குதலை நிறுத்த இந்தியாவை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. யாரும் எங்களை நிறுத்த சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் பாகிஸ்தான் நிறுத்தும் தருணத்தில், நாங்கள் நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தோம்” என்று தெரிவித்தார். சமீப காலங்களில் பிரதமர் மோடியையும், கேரளா அரசையும் சசி தரூர் தொடர்ந்து பாராட்டி பேசி வருவது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.