Skip to main content

என் கால் நகத்தில் வலித்தால் கூட அழும் பக்தர்கள் இருக்கிறார்கள் ! - ஜெயேந்திரர்

Published on 28/02/2018 | Edited on 28/02/2018

2004ல் காஞ்சி ஜெயேந்திரர் நக்கீரன் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி!

காஞ்சி மகாபெரியவரின் சீடர் சங்கரராமன் கொலை தொடர்பாக நக்கீரன் வெளியிட்டுவந்த புலனாய்வு செய்திகள் காஞ்சி மடத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சங்கரராமன் கொலையைக் கண்டித்து நமக்கு பேட்டியளித்திருந்த தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மீண்டும் நம்மைத் தொடர்பு கொண்ட போது... "ஜெயேந்திர சுவாமிகள் தனது தரப்பு விளக்கத்தை நக்கீரனிடம் சொல்ல விரும்புகிறார்'' என்றார். கடந்த 4 இதழ்களாக நக்கீரனில் வெளியான செய்திகள் தொடர்பாக ஜெயேந்திரர் தனது மவுனத்தைக் கலைக்க விரும்புகிறார் என்றதும் சந்திப்பிற்குத் தயாரானோம்.

 

Kanchi jeyendhrar


19-ந் தேதி காலை 8.30 மணி. நமது காஞ்சிபுரம் நண்பர் தனராஜுடன் சங்கர மடத்திற்குச் சென்றோம். பக்தர்களை ஜெயேந்திரர் பார்வையிடும் நேரம் என்பதால் கூட்டம் காத்திருந்தது. பிராமணர் சங்கத் தலைவர் நாராயணனும்  ஜெயேந்திரரின் மேலாளர் சுந்தரேசனும், மகாபெரியவாளின் சமாதியான பிருந்தாவனத்தின் வழியே நம்மை அழைத்துச் சென்றனர்.‘

பக்தர்களை சந்திக்கும் பகுதிக்கு பின்பக்கமுள்ள வி.ஐ.பி. அறையில் காத்திருந்தார் ஜெயேந்திரர். கால்களில் கம்பளி போன்ற துணி போர்த்தியபடி சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த ஜெயேந்திரர், சிரித்தபடி நம்மை வரவேற்று, "சங்கரராமன் கொலை பற்றி நக்கீரனில் எழுதியிருந்தேள். உண்மை நிலவரம் சொல்லத்தான் கூப்பிட்டேன்'' என்றவர் பேட்டிக்குத் தயாரானார். நமது டேப் ரெகார்டர் ஓடத் தொடங்கியது. 

45 நிமிட நேரம் நீடித்த பேட்டியிலிருந்து...
 

நக்கீரன் : வரலாற்றுத் தொன்மை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலுக்குள்ளே ஒரு ரவுடியை வெட்டி கொலை செய்வதைப்போல பெரியவாள் சீடரான சங்கரராமனை கொலை செய்திருக்கிறார்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவர்களிடமும் மனிதநேயம் உள்ளவர்களிடமும் பெரும் அதிர்ச்சியை சங்கரராமன் கொலை ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் அறிவீர்களா?

ஜெயேந்திரர் : நெல்லையிலே ஒரு சிவன் கோயிலிலேயே ஒருத்தரை கொலை பண்ணியிருக்கா. பட்டாச்சாரியாரை கோயிலிலே கொன்ன கதையெல்லாம் இருக்கு. கோர்ட்டிலேயே ரவுடிகளை கொன்னிருக்கா. ரவுடிகளுக்கு கோயில்னும் தெரியாது; மடம்னும் தெரியாது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலேயே ஒருவன் உள்ளே புகுந்துட்டான். நாமெல்லாம் தெய்வ பக்தி உள்ளவர்கள். நமக்குக் கோயில்-பக்தி இதெல்லாம் தெரியறது. ரவுடிகளுக்கும் பைத்தியங்களுக்கெல்லாம் இதெல்லாம் தெரியாது. எத்தனையோ முஸ்லிம், கிறிஸ்தவ தேவாலயங்களில்கூட கொலைகள் நடந்திருக்கு. 

 

Jeyendhrar vijayendhrar

 

நக்கீரன் : கொலையுண்ட சங்கர ராமன் தனது குழந்தைப் பருவம் முதல் சங்கர மடத்துடன் தொடர்புடையவர். அவரது அப்பா மகாபெரியவாளுடன் நெருங்கிப் பழகியவர். சங்கரராமன் உங்களின் சங்கரமடத்தில் நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்டவர். இந்தப் பின்னணியில் இந்தப் படுகொலையில் பலவிதமான சந்தேகங்கள் மடத்தைத் தொடர்புபடுத்தி எழுகின்றதே...?

ஜெயேந்திரர் : சங்கரராமன் மடத்துக்கு ஒண்ணும் பெரிசா பண்ணிடலை. அவங்க அப்பா, மகா பெரியவா காசி யாத்திரைக்குப் போகும்போது கூடப்போனார். அதைத்தவிர அவங்க அப்பாவும்  பெரிசா எதுவும் பண்ணலை. சங்கரராமனுக்கு சங்கரமடம் மட்டும் விரோதி கிடையாது. வைஷ்ணவர்களிடம் விரோதம், கோயில் வாசலில் கடை வைத்திருப்பவர்களிடம் விரோதம்... இப்படி ஏகப்பட்ட நபர்களிடம் விரோதம். ஊர்முழுக்க சங்கரராமனுக்கு விரோதிகள் இருக்கிறார்கள். ஆன்மீகம், அரசியல் எதுவானாலும் ஒரு கொள்கையை விட்டு வெளியே போனால் அந்தக் கொள்கையை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். மதுரை ஆதீனத்திலும், திருப்பனந்தாள் ஆதீனத்திலும் அப்படித்தானே திட்டிக்கொண்டார்கள். எங்கள் மடத்திற்குள் வேலை செய்பவர்களுக்கும் எங்களுக்குமே விரோதம் உண்டு. வாழ்க்கையில் அனுகூலம் பாதிக்கப்படும்போது விரோதம் வரும். எனக்கு சங்கரராமன் மட்டுமல்ல, எத்தனையோ விரோதிகள். கிறிஸ்துவ பாதிரியார்கள், முஸ்லிம் மதத்தினர் எத்தனையோ பேர் எங்களைப் பற்றி கன்னா பின்னாவென கடிதங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் சங்கரராமன் கொலைக்கும் மடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
 

நக்கீரன் : சங்கரராமன் தொடர்ந்து உங்களுக்கு எதிராக கடிதங்கள் எழுதியுள்ளாரே?

ஜெயேந்திரர் : அயோத்திப் பிரச்சினையில் நான் ஈடுபடும்போது வெடிகுண்டு மிரட்டலே மடத்திற்கு வந்தது. எல்லோரும் கடிதம் எழுதுவார்கள். தி.க.காரர்கள், தி.மு.க.காரர்கள் தொடர்ந்து கடிதம் எழுதுவார்கள். எனக்கு மிரட்டல் பல இடங்களிலிருந்து வரும். இதற்காக கவலைப்படுவதில்லை. கடவுள் இருக்கிறார். நம்பிக்கை இருக்கிறது.


 

Sankararaman Kanchi

சங்கரராமன்


நக்கீரன் : மற்றவர்களின் கடிதங்களைவிட சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் வந்த கடிதங்களில் சங்கரமடத்தில் நடக்கும் உள் விவகாரங்கள் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதங்கள் உங்களை தனிப்பட்ட முறையில் பாதிக்கவில்லையா?

ஜெயேந்திரர் : ஹா...ஹா...ஹா... (சிரிப்பு) சோமசேகர கனபாடிகள் பெயரிலே சங்கரராமன்தான் கடிதம் எழுதினான் என்று நக்கீரன்லயே எழுதியிருக்கேளே. சோமசேகரன் என்றால் சந்திரசேகரர் மகா பெரியவாள் அந்தர்யாமியாய் நின்னு சொல்றதா சங்கரராமனே கடிதம் எழுதியிருந்தான். அவர் பெயரை வச்சு கலாட்டா பண்ண எழுதிய கடிதங்கள் அவை. சங்கரராமன் மட்டுமல்ல ராதா கிருஷ்ணனும் இதுபோல கடிதம் எழுதினான். அதையெல்லாம் கடவுளை தியானம் பண்றதைத் தவிர வேறெ வேலை எதுவும் இல்லைன்னு பொறுத்துக்கிட்டேன். 
 

நக்கீரன் : சங்கரராமன் கொலையைப் போலவே ராதாகிருஷ்ணன் மேல் நடத்தப்பட்ட தாக்குதலும் பெரிதாகப் பேசப்பட்டது. அந்தத் தாக்குதலில் மடத்துக்கு நெருக்கமான மதிநாடார் என்பவர் ஈடுபட்டார் என போலீஸ் ரெக்கார்டுகள் சொல்கிறது. ராதாகிருஷ்ணனே நான் தாக்கப்பட்டதற்குக் காரணம் சங்கரமடம்தான் என எழுதியே கொடுத்தார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ஜெயேந்திரர் : நக்கீரன்ல எழுதினபடி ராதாகிருஷ்ணன் டாக்டரெல்லாம் இல்லை. அவன் சாதா கிருஷ்ணன்தான். சங்கர மடத்தின் பவித்ரம் தெரியாதவன் சொல்ற குற்றச்சாட்டு அது. இப்ப சங்கரராமன் கொலையில் சங்கரமடத்துக்குத் தொடர்பா? சி.பி.ஐ. விசாரணை தேவைன்னு அறிவுவளர்ச்சி மன்றம் என்ற பெயரில் தி.க.காரன் போஸ்டர் ஒட்டியிருக்கான். 2000 வருஷம் பாரம்பரியம் மிக்க மடம் இது. பிரம்மச்சரியம், தர்மபிரச்சாரம், ஜனசேவனம் இதைத்தவிர வேறு சிந்தனை கிடையாது. எங்கேயோ, எவனோ தாக்கப்படுறதுக்கு, கொலை செய்யப்படுறதுக்கெல்லாம் சங்கரமடம் எப்படி பொறுப்பாகமுயும்?
 

நக்கீரன் : நீங்கள் பரம்பரை தர்மகர்த்தாவாக இருக்கும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு தங்க விமானம், தங்கத்தேர் ஆகியவை செய்ததில் முறைகேடுகள் நடந்தது என ஆடிட் ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து சென்னை ஹைகோர்ட்டிலும், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையிலும் சங்கரராமன் வழக்குத் தொடர்ந்தார். அதன்விளைவாக தங்களது மடாதிபதி பதவியே பிரச்சினைக்குள்ளானது. அதன் தொடர்ச்சியாகத்தான் சங்கரராமன் கொல்லப்பட்டார் என ஆதாரங்களுடன் வரும் தகவல்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?

ஜெயேந்திரர் : அதெல்லாம் சங்கரராமன் எழுப்பிய பொய்க் குற்றச்சாட்டுகள். இந்து அற நிலையத்துறையின், இ.ஓ. நிர்வகிக்கும் கோயில் காமாட்சியம்மன் கோயில். ஆடிட்டிங் ரிப்போர்ட் என்ற பெயரை வைத்து அவர் எழுதியதெல்லாம் பொய்க்குற்றச்சாட்டுகள். அதையெல்லாம் தவறு என இ.ஓ.வே அரசுக்கு ரிப்போர்ட் கொடுத் துட்டார். மடத்தை வைத்து பெரியவாளுடன் இருந்த நெருக்கத்தை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்த நினைத்தார் சங்கரராமன். நான் அதற்குத் தடைவிதித்ததால் என் மீது அவருக்குக் கோபம். 


நக்கீரன் : தொடர்ந்து உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்ததால்தான் அவர் கொல்லப்பட்டாரா?

ஜெயேந்திரர்  :  அவர்  இன்றைக்கா இம்சை கொடுத்தார். கடந்த 40 வருடங்களாக இம்சை கொடுத்துக் கொண்டிருந்தார். ராதாகிருஷ்ணனும் அப்படித்தான். ராதாகிருஷ்ணனை சிறிய வயதிலிருந்தே எனக்கு தெரியும். மகா பெரியவாளிடம் வந்து ஒட்டிக் கொண்டபோதே நான் எதிர்த்தேன். மகா பெரியவா அங்கே இங்கே வெளியே போக ஆரம்பித்தார். அப்ப மடத்துக்குள்ளே கோஷ்டிகள் உருவாக ஆரம்பித்தது. அதை எதிர்த்துதான் பெரியவாகிட்ட சொல்லிட்டுத்தானே நான் தலைகாவிரிக்கு போனேன்.

அப்ப இந்த ராதா கிருஷ்ணன் ரொம்ப ஆட்டம் போட்டான். சுப்ரமண்யம் சுவாமியுடன் சேர்ந்துண்டு ராஜிவ்காந்தி பீரியடுல போடாத ஆட்டம் இல்ல. நான் வந்து பொறுப்பேத்துண்டதும் அவனை கட் பண்ணிவிட்டேன். சோமசேகர கனபாடிகள்ன்ற பெயரில கடிதம் வர ஆரம்பித்தது. அவனைக் கூப்பிட்டு பேசினேன். கடிதம் எழுதுறது நின்னுது. அதுக்கப்புறம் சங்கரராமன் தன் சொந்த பெயரிலேயே கடிதம் எழுதினான். அதையெல்லாம் நான் கிழிச்சு போட்டுடுவேன். அத வச்சுண்டா ஏதாவது வம்பு வந்துடப் போறதுன்னு பயம். வக்கீலெல்லாம் சங்கரராமன் மேலே கேசு போடுங்கோன்னு சொன்னா. நான் வேண்டாம்னுட்டேன். அவன கொல பண்ற நோக்கமெல்லாம் எனக்கு கிடையாது.


நக்கீரன் : சங்கரராமன் கடிதம் எழுதினார். உங்களுக்கு தொல்லை கொடுத்தார். அவரை கூப்பிட்டு கண்டித்திருக்கலாமே?

ஜெயேந்திரர் : என் கால் நகத்தில் வலித்தால்கூட அழக்கூடிய பக்தர்கள் பல பேர் இருக்கிறார்கள். இவ்வளவு தொல்லை கொடுத்த சங்கரராமனை கூப்பிட்டு பேசினால் திருந்துற பிறவியில்லை. எனக்கு தொடர்ந்து வேதனை கொடுத்து கொண்டிருந்தான். ஒரு முறை மகா பெரியவாளின் சமாதி உள்ள பிருந்தாவனத்திற்கு வரும் போதுகூட தகராறுசெய்தான். சங்கரராமன் செய்த இம்சையை பொறுக்க முடியாத எனது பக்தர்கள்கூட சங்கரராமனின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம். அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்.

 

Chandrasekarasaraswathi

மகாபெரியவர்


 

நக்கீரன் : பாலபெரியவா விஜயேந்திரரின் தம்பி ரகு, உங்களது மெய்க்காப்பாளராக இருந்த போலீஸ்காரர் கண்ணன் ஆகியோரது பெயர்கள் இந்த கொலை விவகாரத்தில் அடிபடுகிறதே?

ஜெயேந்திரர் : ரகு மீது பெண் விஷயம் உட்பட ஏகப்பட்ட புகார்கள் உள்ளது. ஆனா, அவன் கொலை செய்வான் என நான் நம்பவில்லை. இருந்தாலும் ரகு மீது நடவடிக்கை எடுப்பேன். கண்ணன் மடத்திலிருந்து 40 லட்ச ரூபாய் திருடினான் என நானே சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தேன். அவன் ஒரு போலீஸ்காரன். அவனுக்கும் மடத்துக்கும் சம்மந்தமில்லை.

நக்கீரன் : மகாபெரியவாள் காலத்தில் மடத்தின் மீது இதுபோன்ற புகார்கள் வந்ததில்லை தற்பொழுது ஏன் வருகிறது?

ஜெயேந்திரர் : அதனால்தான் அவர் மகா பெரியவாள். மடத்தில் சில களைகள் முளைத்து இருக்கிறது. அதை நானே களையெடுத்து விடுவேன். இதெல்லாம் எனது தலையெழுத்து. -என்று பேட்டியை முடித்தார் ஜெயேந்திரர். பிராமணத் தமிழில் பேசியவர் இடையிடையே இயல்பான தமிழிலும் பேசினார். பேட்டி முடிந்த பின் ஆப்பிள் கொடுத்து ஆசீர்வாதம் செய்தவர், "மடத்தைப் பற்றி புகார் வந்தால் நேரில் சொன்னேள்னா உபயோகமா இருக்கும்'' எனக் கேட்டுக்கொள்ளவும் தவறவில்லை.   
 

சார்ந்த செய்திகள்