Skip to main content

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Ex-Prime Minister VP Singh statue opening

 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அனைத்து பணிகளும் முடிவடைந்தன.

 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை இன்று (27.11.2023) காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜய சிங், அபய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். 

Ex-Prime Minister VP Singh statue opening

 

முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையின் பீடத்தில், “தேசத்தின் திட்ட செயல்பாடுகளில் சமத்துவம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். சமத்துவம் என்பது அரசியல் சமத்துவம், அதிகாரப் பரவலாக்கம், தேர்தல் சீர்திருத்தங்கள், பத்திரிகை சுதந்திரம் போன்ற அம்சங்களைக்கொண்ட ஒரு பரந்த கருத்தாகும்” என வி.பி.சிங் தெரிவித்த கருத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்