Skip to main content

நாங்கள் நினைத்தால் ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக்குவோம் - பாஜக தலைமை அதிரடி!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

அ.தி.மு.க.வில் கடந்த பதினைந்து நாட்களாக வீசிக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சுக்கும் இடையே வீசிய புயலின் சுவடே தெரியாமல் புதன்கிழமை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் மிக அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த அமைதிக்கு காரணம் எடப்பாடி அரசுக்கு எதிராக மத்திய அரசிலும் பா.ஜ.க.வின் தலைமையிலும் வீசிக் கொண்டிருக்கும் புயல் என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

ministers



புதனன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஐஸ்க்ரீம், மிக்சர், ஸ்வீட் என பலகாரங்கள், காபி, டீ என பரிமாறிக் கொண்டே இருந்தார்கள். பொதுவாக கூட்டம் முடிந்த பிறகுதான் இவையெல்லாம் வரும். கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இப்படி பலகாரங்களை கொடுத்து வாயை அடைத்திருக்கிறார்கள் என்று நிர்வாகிகள் தங்களுக்குள் பேசினர். கட்சியின் முக்கிய தலைகள் மட்டுமே பேசின. அதில் இ.பி.எஸ்., "உள்ளாட்சித் தேர்தலில் கட்சி பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும்' என வலியுறுத்தினார். கே.பி.முனுசாமி, "கட்சி கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் பேசக்கூடாது' என்றார். வைத்திலிங்கம், "ஒற்றைத் தலைமை தேவையில்லை' என்றார். கூட்டம் முடிந்தது என கிளம்பி விட்டார்கள்.

 

admk



கூட்டத்திற்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் தோல்விக்குக் காரணம்' என சொன்ன அமைச்சர் சி.வி.சண்முகம் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. தலைமை மாற்றம் பற்றி பேசிய ராஜன் செல்லப்பாவிடமிருந்து கூட்டத்தில் சத்தம் எழவில்லை. குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வைத்தியம் செய்துகொள்ள போய்விட்டார் என்றனர். எல்லோரும் அமைதி காத்ததால், வந்திருந்த நிர்வாகிகள் புறப்பட்டார்கள்.

 

bjp



ஏனிந்த அமைதி என அ.தி.மு.க. தலைவர்களிடம் கேட்டபோது, ""மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு, இன்னும் 15 நாட்களுக்குள் முக்கிய அமைச்சர் கைது, இரண்டு மாதங்களில் ஐந்து அமைச்சர்கள் கைது என புதிய மத்திய அரசு எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருப்பதாக பட்டியலிட்டனர். குருமூர்த்தி தனது பத்திரிகையில் அ.தி.மு.க.வை கிண்டலடித்து போட்ட கார்ட்டூனை கண்டித்ததோடு ராஜன் செல்லப்பா, குன்னம் எம்.எல்.ஏ. மூலம் ஓ.பி.எஸ்.சை குறிவைத்து ஒற்றைத் தலைமை என பேசியது டெல்லியை டென்ஷனாக்கிவிட்டது.

 

bjp



நாங்கள் நினைத்தால் ஓ.பி.எஸ்.சை முதல்வராக்குவோம். எடப்பாடியை கொடநாடு வழக்கில் கைது செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும். ஓ.பி.எஸ்.சை முதல்வராக்கி இன்று எடப்பாடியோடு இருக்கும் அத்தனை எம்.எல்.ஏ.க்களையும் ஆதரிக்க வைக்க எங்களால் முடியும். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இதையெல்லாம் செய்தவர்கள் நாங்கள். யாரிடம் விளையாடுகிறீர்கள்' என அமித்ஷா விடமிருந்து எச்சரிக்கை வந்தது. அத்துடன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் டெல்லிக்கு அழைத்தார் அமித்ஷா. அதையடுத்து அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி ஆகியோர் அமித்ஷாவையும், பியூஷ் கோயலையும் சந்தித்தனர். டெல்லியில் சரணாகதி புராணம் பாடிவிட்டு வந்த பிறகுதான் நிர்வாகிகள் கூட்டம் தலைமைக் கழகத்தில் நடந்தது.

 

governor



நிர்வாகிகள் கூட்டத்தில் எந்த வில்லங்கமான விவாதமும் வரக் கூடாது. "வாயை மூடி பேசவும்' என டெல்லி உத்தரவிட்டபடியே அமைதியாக ஒரு கூட்டத்தை எடப்பாடி நடத்தினார். அதற்கு ஓ.பி.எஸ்.சும் ஒத்துழைப்பு தந்தார்'' என டெல்லியில் வீசிய புயலை பற்றி விளக்குகிறார்கள். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்பட சேனல் மைக்குகள் முன் உரை யாற்றுபவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட் டுள்ளது. அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டம் முடிந்தவுடன் டெல்லி புயலின் வேகத்தைக் குறைக்க கவர்னரை சந்தித்தார் எடப்பாடி.


டெல்லி புயலை நேரடியாக எதிர் கொண்டவர்கள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும்தான். "கோவை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சூலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை விட 19,000 வாக்குகள் குறைவாக பெற்றார். சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. 10,000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெறுகிறதே, கிட்டத்தட்ட 30ஆயிரம் வாக்குகள் இந்த இடைவெளிக்குள் அதிகமானது எப்படி?' என வேலுமணியை அமித்ஷா மிக கோபமாக கேட்டார். பா.ஜ.க. வெற்றியில் அ.தி.மு.க. அக்கறை காட்டவில்லை என்பதுதான் அமித்ஷாவின் குற்றச்சாட்டு.


மோடியா-லேடியா' என ஓப்பனாக சவால்விட்டுப் பேசிய கட்சியில், இப்போது மோடி-அமித்ஷா உத்தரவின்படி அத்தனை பேரும் வாயை மூடி பேசவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.