‘எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்..’ - வெயில் திரைப்படத்துக்காக நா.முத்துகுமார் எழுதிய இந்தப் பாடல் வரி, கந்தகபூமி என்று சொல்லப்படும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு, என்றைக்கும் பொருந்திப் போகிறது.
‘நமது மேகங்கள் எல்லாம் களவு போவதற்கு காரணம் என்ன? சினிமாவில் இத்தனை சீரியஸாகப் பாடப்பட்ட இயற்கையின் வஞ்சனைக்கு, மனிதர்களால் தீர்வு காண முடியாதா?’ என்றெல்லாம் சிந்தித்தனர்.‘கனத்த, கருத்த மேகங்களை குளிர்வித்து மழையாக மாற்றும் சக்திமிக்க அடர்வனங்கள் சிவகாசியில் இல்லை. நம் ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் மரங்களுக்கு, கடந்து செல்லும் மேகங்களை மழையாக மாற்றும் தெம்பும், திராணியும் இல்லை.’ என, அதற்கான விடை கிடைத்தது.
‘மேகக்கூட்டங்களின் வயிற்றைக் குத்திக் கிழிக்கும் சக்தி, எதிர்காலத்தில் நாம் அமைக்கவிருக்கும் அடர்வனங்களுக்கு மட்டுமே உண்டு..’ என்பதை உணர்ந்த அவர்கள், மளமளவென்று காரியத்தில் இறங்கினார்கள்.
யார் அவர்கள்? என்ன செய்தார்கள்?
பசுமையே நாட்டின் வளமை என்ற உறுதியுடன், இயற்கையை காத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை தடுத்தல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும், சிவகாசி எக்ஸ்னோரா இன்னோவேட்டர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள்தான் அவர்கள். ஒருகாலத்தில் ஊரின் நீராதரமாகத் திகழ்ந்த பெரியகுளம் கண்மாய், தற்போது கிரிக்கெட் மைதானமாகிவிட்டது கண்டு வேதனையுற்றனர். அங்கே 15 அடி உயரத்தில், 7500 சதுர அடியில், மியாவாக்கி முறையில் செயற்கைத் தீவு ஒன்றை அமைத்து, அடர்வனங்களை உருவாக்கும் முயற்சியாக, 2000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் திட்டமிட்டனர்.
திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, அந்த செயற்கைத் தீவில், புங்கன், தான்சி, விலாம், ஸ்பெட் ரோலியா, கருங்காளி, நெட்டிலிங்கம், செண்பகம், மகிழம்பூ, இலவம்பஞ்சு, அசோகா, அரசமரம், நாகலிங்கம் மற்றும் மருத்துவ பயன்மிக்க மருதமரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை ஒரே இடத்தில் நடப்பட்ட நிகழ்ச்சியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.
எக்ஸ்னோரா உறுப்பினரான வெங்கடேசுவரன் நம்மிடம் “டிஜிட்டல் உலகமாகிவிட்டது. இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மக்கள் பழகிவிட்டனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நம்மில் பலருக்கும் அக்கறையில்லை. இயற்கையை காக்கவும், பசுமையை உருவாக்கவும் மரங்கள் அவசியமாகின்றன. நடப்பட்ட மரக்கன்றுகளை முதல் 6 மாதங்கள் மட்டும் பராமரித்தாலே போதுமானது. எந்த மண்ணிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும், இவை வளர்ந்து மரமாகி, உறுதியாக பலன் கொடுக்கும்.” என்றார், நம்பிக்கையோடு.
சிவகாசி பகுதியில், சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் உதவியோடு, வருங்காலத்தில் நகர் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கும் திட்டம் வகுத்துள்ளனர்.
‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’
-அவ்வையின் இம்மூதுரை, சிவகாசியில் பலிக்கட்டும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/sivakasi-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/sivakasi-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/sivakasi-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/sivakasi-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/sivakasi-5.jpg)