Skip to main content

மாட்டுக் குண்டர்களின் தாக்குதலைத் தடுக்க அமித் ஷா தலைமையில் குழுவாம்!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

நேரடியாக மூக்கைத் தொடுவதற்கு பதிலாக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதே பாஜகவின் பாணி. நீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றவே இதுபோன்ற பல பாணிகளை பாஜக கைவசம் வைத்திருக்கிறது.
 

lynch

 

இஸ்லாமியர்களையும், தலித் மக்களையும் அடித்துக் கொல்வதற்கு குண்டர்களை உருவாக்குவதும் பாஜகதான். மாட்டுக் கறி தின்றான் என்றும், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட மறுத்தான் என்றும் இதுவரை 400க்கு மேற்பட்ட அப்பாவிகளை காவிக் குண்டர்கள் கொன்றிருக்கிறார்கள்.
 

அப்படிக் கொன்றவர்கள் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எதையும் சம்பந்தப்பட்ட பாஜக அரசுகள் மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சான்றிதழ் கொடுத்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
 

இந்நிலையில்தான், அப்பாவிகளை கும்பலாக தாக்கி கொலை செய்வதைத் தடுக்க 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அறிவித்திருந்தது. அதை இத்தனை மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதும் தூசு தட்டியிருக்கிறது.
 

பசுக்குண்டர்களையும், ஜெய் ஸ்ரீராம் குண்டர்களையும் தடுத்து நிறுத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்திருக்கிறார். இந்தக் குழுவுக்கு தலைவர் யார் தெரியுமா? சாட்சாத் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். இந்த அறிவிப்பைக் கேட்டதும், அரசியல் விமர்சகர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்களாம்.
 

ஆனால், அமித் ஷா தலைவரானதும், தாக்குதல் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்று ஒரு பகுதியினரும், தாக்குதல் குறைய வாய்ப்பு இருப்பதாக ஒரு பிரிவினரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். எப்படியோ தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் நாட்டுக்கு நல்லது.
 

 

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

“ரத்து செய்வதற்குப் பதிலாக மேம்படுத்தியிருக்கலாம்...” - உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அமித்ஷா

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Amit Shah on the Supreme Court verdict for electoral bonds

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியானது. 

இதையடுத்து, தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (15-03-24) உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்பிஐக்கு கேள்வி எழுப்பினர். தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. 

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்திய அரசியலில் கறுப்புப் பணத்தின் செல்வாக்கை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் முழுமையாக மதிக்கிறேன். ஆனால், தேர்தல் பத்திரங்களை முற்றிலுமாக ரத்து செய்வதற்குப் பதிலாக, அதை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

பாஜக ஆட்சியில் இருப்பதால் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தால், பா.ஜ.க பலனடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இவருக்கு யார் இதை எழுதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் கிடைத்தது. மொத்த அரசியல் கட்சிகளின் பத்திரங்கள் எண்ணிக்கை ரூ.20,000 கோடி. அப்படியென்றால் மீதி ரூ.14,000 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் எங்கே போனது?” என்று கூறினார்.