
சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் பராசக்தி படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்க ரான் பிக்சர்ஸ் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது.
இதனிடையே மதராஸி படமும் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பராசக்தி படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “பெரும்பாலான படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இன்னும் 40 நாள் படப்பிடிப்பு தான் இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அவர் இப்போது மதராஸி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தபட படப்பிடிப்பு முடிந்ததும் எங்க படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும்” என்றார். அவரிடம் இந்தி எதிர்ப்பை பற்றி படம் பேசுகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மீடியாவில் அதைப் பற்றி நிறைய பேசிவிட்டார்கள். ஆனால் நான் அப்படி சொல்லவில்லை. இப்படம் சகோதரர்களின் கதை” என்றார்.
முன்னதாக இப்படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், தமிழகத்தில் 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகுவதாக தகவல் வெளியானது. பின்பு வெளியான டைட்டில் டீசரிலும் அந்த காலத்தை பிரதிபலிக்கும் வகையிலும் போராட்டத்தை சிவகார்த்திகேயன் ஒன்றிணைக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.