
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அண்மையில் தமிழகம் முழுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் தொடர்ந்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக ஆளும் கட்சியான திமுக மீது டாஸ்மாக் விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பல முறை நான் சொல்லிருக்கிறேன். ஈ.டி. இல்லை, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் தொடர்ந்து எங்களுடைய குரல் கொடுத்து கொண்டு தான் இருப்போம். என்ன பண்ணாங்க? மிரட்டத்தான் பார்த்தார்கள். மிரட்டி அடிபணிய வைக்கப் பயப்படுவதற்கு அடிமை கட்சி கிடையாது திமுக. எங்களுடைய கலைஞர் உருவாக்கிய கட்சி. எங்களுடைய சுயமரியாதை கட்சி. பெரியாருடைய கொள்கைகளைப் பின்பற்றும் கட்சி. தவறு செய்தவர்கள் தான் பயப்படுவார்கள். நாங்கள் யாருக்கும் அடிபணியத் தேவையில்லை. பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாகச் சந்திப்போம்” எனத் தெரிவித்தார்.