Skip to main content

திருஞான சம்பந்தர் எழுதிய 'வாழ்க அந்தணர்' ஏடு தண்ணீரில் எதிர்நீச்சல் போட்ட அதிசயம்!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், சமணத்திற்கும் சைவத்திற்கும் இடையே நடந்த புனல்வாதம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

இன்று விவாதங்கள் செய்வதற்கு நாடாளுமன்றம், சட்டமன்றம், வழக்காடு மன்றம் எனப் பல சபைகள் உள்ளன. ஜனநாயக நாட்டில் விவாதங்கள் மூலமும் கேள்விகள் மூலமும் பிரச்சனைக்கு நாம் தீர்வு காண்கிறோம். பௌத்தத்தின் கொடியும் சமணத்தின் கொடியும் தமிழகத்தில் பறந்துகொண்டிருந்த காலத்தில் சைவம் இந்த மண்ணில் காலூன்றப் போராடிக்கொண்டிருந்தது. சமணத்திற்கும் சைவத்திற்கும் இடையே மிகப்பெரிய சண்டை நடந்ததாகச் சரித்திரம் பதிவு செய்துள்ளது. எண்ணாயிரம் சமணர்களை மதுரையில் கழுவேற்றினார்கள் என்ற செய்தியைப் படிக்கிறபோது அதை உண்மை என்றுதான் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.

 

சண்டைக்குச் செல்லாமல், சச்சரவில் ஈடுபடாமல் இன்று விவாதம் செய்வதுபோல அன்றும் விவாதம் செய்தார்கள். அனல்வாதம், புனல்வாதம் என்ற இரண்டு முறை அன்றைக்கு வழக்கத்தில் இருந்தன. அனல்வாதம் என்றால் தன்னுடைய படைப்புகளை, தன்னுடைய எழுத்துகளை தீயில் போடுவது.  தீயில் போட்டதற்கு பிறகு அது எரியாமல் இருந்தால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். புனல்வாதம் என்றால் தீயிற்குப் பதிலாக தண்ணீரில் போடுவது. தண்ணீரில் போட்ட அந்த ஏடு நீருக்கு எதிர்நீச்சல் போட்டால் அதை எழுதியவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். 

 

சமணத்திற்கும் சைவத்திற்கும் இடையேயான மோதலில் மதுரைக்கு பக்கத்தில் புனல்வாதம் நடைபெற்றது. புனல்வாதத்திற்கு தயாரானார் ஞானசம்பந்தர். அவர் எழுதிய ஏடு தண்ணீரில் போடுவதற்குத் தயாராக இருந்தது. அது தண்ணீரில் இழுத்துக்கொண்டு சென்றால் அந்தப் பாட்டிற்கு உயிரும் உணர்ச்சியும் இல்லை என்று அர்த்தம். அந்தப் பாடலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்போது சமணர்கள் எழுதிய ஏடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட, ஞானசம்பந்தர் எழுதிய ஏடு மட்டும் எதிர்நீச்சல் போட்டது. அந்த ஏட்டில், 'வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்' என்று ஞானசம்பந்தர் எழுதியிருந்தார். ஒருவன் வாழவேண்டும் என்று வாழ்த்தினால் நடக்காத அதிசயங்கள் எல்லாம் நடக்கும். தேர் ஓடவில்லை எனும்போது சேந்தனார் பாடியதும் தேர் நகர்ந்தது என்று படிக்கிறோம். அதேபோல 'வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்' என்று ஞானசம்பந்தர் எழுதிய அந்த ஏடு எதிர்நீச்சல் போட்டது.

 

ஆணினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். இன்றைக்கு பசு சர்ச்சைக்குரிய அரசியலாகிவிட்டது. அன்றைக்கு பசுக்களைப் பாதுகாப்பது, மேய்ப்பது, பணிவிடை செய்வது என்பது அறமாகக் கருதப்பட்டது. ஆகவே அந்தணர் என்போர் அறம் பேசக்கூடிய அறவோர். அந்தணர்கள் என்றால் சமுதாயத்தை ஆற்றுப்படுத்துபவர்கள். அந்தணர்கள் என்பவர்கள் ஆட்காட்டி விரல்நீட்டி குற்றம் சாட்ட முடியாத அப்பழுக்கற்றவர்கள். அவர்கள் ஆகாயத்தைப்போல சுத்தமானவர்கள். அந்த அந்தணர்கள் வாழட்டும் என்று  அந்த ஏட்டில் வாழ்த்து எழுதியிருந்தார். அதற்கு அடுத்தடுத்த வரிகளில் மழை பொழியட்டும்; குடி செய்து மக்களை பாதுகாக்கும் மன்னனின் புகழ் ஓங்கட்டும்; எல்லாவித தீமைகளும் ஆழ்ந்து போகட்டும்; இறைவனின் திருநாமம் எல்லா இடங்களிலும் சூழட்டும்; இந்த உலகத்தின் எல்லா துயரங்களும் நீங்கட்டும் என எழுதியிருப்பார்.

 

வாழ்த்து என்பது ஒருவனை வாழவைக்கும் என்பதைவிட, ஒருவனுடைய வாழ்த்து ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவனுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது என்பதைவிட ஒரு வாழ்த்தை தண்ணீர்கூட அடித்துச் செல்லாது, ஒரு வாழ்த்தை நெருப்புகூட தின்று தீர்க்காது. காரணம் அந்த வாழ்த்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது என்பதை தமிழ்ப்பாட்டில் பதிவுசெய்துள்ளார் திருஞானசம்பந்தர். அதை மதுரையில் அவர் நிரூபிக்கவும் செய்தார். இதை 'வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு' என்று மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைப் பாட்டிலும் பதிவு செய்துள்ளார்கள்.ஒரு வாழ்த்திற்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பதை மேற்கண்ட விஷயத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.  

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.