இந்திய சுதந்திரப் போரில் வரலாற்றுப் பதிவாக கொங்கு மண்டலத்தில் இருப்பது தீரன் சின்னமலை ஆங்கிலப் படைகளை எதிர்த்து நடத்திய போர். இந்த தீரன் சின்னமலையின் போர் படையில் முக்கிய தளபதியாக இருந்தவர்தான் பொல்லான். அதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இப்போதும் உள்ளது. இந்த பொல்லான் பற்றி நீண்ட நெடுங்காலமாக பேசப்படவே இல்லை. தீரன் சின்னமலை நினைவு மண்டபம் அவர் பிறந்த ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டு சின்னமலையின் நினைவு நாளான ஆடி பதினெட்டு அன்று அரசு நிகழ்ச்சிகள் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

ஆனால் அவர் படையில் பணியாற்றி ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பொல்லானைப் பற்றி அரசு கண்டுகொள்ளவே இல்லை. சமீப காலத்திற்கு முன்பு தான் பொல்லான் வரலாறு மீட்புகுழு என்ற ஒரு இயக்கம் அமைக்கப்பட்டு அதன் மூலமாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் பொல்லான் பிறந்த ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையம் கிராமத்தில் நினைவு சின்னம் மற்றும் மணிமண்டபம் அமைக்க அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன் தலைமையில் பல போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தியது.

இதில் உள் அரசியல் என்னவென்றால் தீரன் சின்னமலை ஒரு குறிப்பிட்டசமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், பொல்லான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் அரசு அலட்சியப்படுத்துகிறது என்ற குரல்களும் எழுந்தது. இந்த நிலையில் தேசிய எஸ்.சி -எஸ்.டி ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் அவர்களிடம் பொல்லானுக்கு நினைவு சின்னம் மற்றும் மணிமண்டபம் அமைக்க மனு கொடுக்கப்பட்டது.

அதன் பேரில் இது குறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு சென்ற 18 ந் தேதி தேசிய எஸ்.சி,எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுதந்திரப் போராட்ட்த்தில் படைதிரட்டி பங்கு கொண்ட தீரன் சின்னமலை சாதி வேற்றுமையை பார்க்கவில்லை ஆனால் இப்போது உள்ள ஆட்சியாளர்கள் பார்க்கிறார்களே என வேதனையுடன் கூறுகிறார்கள் பொல்லான் வரலாறு மீட்பு பேரவையினர்.