
வேலூரில் அண்மையில் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அது குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்வு உணரப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு அச்சத்திலும் இருந்துவந்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் தேதியும் அதேபோல் நேற்றும் (25.12.2021) காலை சுமார் 9 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து நேற்று மதியமும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்நிலையில், பேரணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். நேற்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர் உள்ளிட்டோர் தரைக்காடு பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தபோதே நில அதிர்வை உணர முடிந்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூரில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தரமான வீடுகள் கட்டித்தரப்படும். கட்டடம் வலுவானதாக இல்லாததால் 40 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன என தெரிவித்துள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்டவர்கள் 3 முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நில அதிர்வு தொடர்பாக ஆய்வு செய்யக் குழுவை அனுப்ப மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.