மாணவர் சங்க நிர்வாகியை தாக்கிய காவல் துறை துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் அரசு திருவிக கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 300- க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாருர் நகர பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையின் போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த மாணவர்களை நிறுத்தி நகர காவல் துணை ஆய்வாளர் தாக்கியதாகவும், இதில் மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருவாரூர் அரசு திருவிக கலை, கல்லூரி மாணவர்கள் 300- க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது காவல்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,’’திருவிக கல்லூரி மிகவும் பாரம்பரியமிக்க கல்லூரி இங்கு சமீப காலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான நெருக்கம் குறைத்துவிட்டது. அதனால் மணவர்கள் எதற்கு எடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்ய துவங்கிவிட்டன. மாணவர்களை கல்லூரியின் எதிர்கால நலனை கருதி நெறிப்படுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும்,’’என்கிறார் வேதனையோடு.