
“சமூக சீர்திருந்த கருத்துக்கள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என சி.பி.எம் மாநில தலைவர் பெ.சண்முகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழக சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை தடுப்பு சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நமக்கென்று ஒரு கொள்கை இருக்கலாம். அதை மக்கள் மீது திணிக்க இயலாது. மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது என்று பதில் அளித்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர் பொருத்தமில்லாத கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்து விட்டதாகவும் கூறினார்.
அமைச்சரின் பதிலும், சபாநாயகரின் கருத்தும் மூட நம்பிக்கையை பரப்பி வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும். மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கை என்பது வேறு. அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் பொருந்தாத மூடநம்பிக்கை என்பது வேறு. கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக" என வள்ளலாரே பாடியுள்ளார். மக்களிடம் பரப்படும் மூட நம்பிக்கைகளால் பொருட்செலவு, உயிர் பலி உட்பட பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது.
சமூக சீர்திருந்த கருத்துக்கள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.