Skip to main content

மனைவியின் நடத்தையில் சந்தேகம்; கணவரின் வெறிச்செயல் - பகீர் சம்பவம்

Published on 23/04/2025 | Edited on 23/04/2025

 

Husband  incidents wife over suspicion of her behavior

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே நம்மாழ்வார் நகரைச் சேர்ந்தவர் 60 வயதான மரிய சாமுவேல். இவரது மனைவி ஜோஸ்பின் மேரி. இவருக்கு வயது 57.  இந்த தம்பதிக்கு அருண் ராஜ், ஆனந்த ராஜ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.  மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர். 

இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே சந்தேகத்தின் பேரில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை(21.4.2025) காலையில் மூத்த மகன் அருண் ராஜ் தனது தாய்க்கு போனில் தொடர்பு கொண்டு உள்ளார். தொடர்பு கிடைக்காததால் மாலையில் தனது தாயின் தம்பியான ஜான் போஸ்கோவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்துள்ளது. ஆனால் வீட்டின் வாசலில் இருந்து ரத்தக்கறை ஊருக்கு வெளியே வரை இருந்துள்ளது. அதை பின்தொடர்ந்து சென்று பார்த்த போது அங்குள்ள காட்டுப் பகுதியில்  பாலத்தின் அடியில் ஜோஸ்பின் மேரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  

தகவல் அறிந்த ஸ்ரீ வைகுண்டம் பொறுப்பு டிஎஸ்பி ஜமால், சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்.ஐ. அந்தோணி சூசைராஜ், சிவ சுப்பிரமணியம் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த ஜோஸ்பின் உடலை பார்வையிட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அவரது கணவர் மரிய சாமுவேலை தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.  போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மஞ்சள் நீர் காயல் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மரிய சாமுவேலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால்  அடிக்கடி  மரிய சாமுவேலுக்கும் ஜோஸ்பினுக்கும் தகராறு இருந்து வந்ததும்,  அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மனைவியை கணவரே கழுத்தறுத்து கொலை செய்து விட்டு அதிகாலையில் வீட்டிலிருந்து ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாலம் வரை மனைவியின் சடலத்தை இழுத்து சென்று குழி தோண்டி புதைக்க முயன்றுள்ளதும்,  அதற்குள் பளபளவென விடிந்து விட்டதால் மனைவி ஜோஸ்பின் மேரி சடலத்தை அங்கேயே போட்டு விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் என்பதும் அம்பலமானது.

சார்ந்த செய்திகள்