
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கூட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி என்ற மூதாட்டி. இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். ஏற்கனவே இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவரது பிள்ளைகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர் ஆடு மாடுகள் வைத்து மேய்த்து வந்தார். இந்நிலையில் நேற்று (20.05.2025) மாலை, ஆடு மற்றும் மாடுகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்ற சரஸ்வதி வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் வனப்பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்குச் சரஸ்வதி அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். மேலும் அவரது காது, மூக்கில் அணிந்திருந்த நகைகள் அறுக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலையைச் செய்தவர்கள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளைக் கொண்டு, அவ்வழியாகச் சென்ற இருவர் குறித்து சேலம் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி நகைக்காக அடித்தும், காது, மூக்கு ஆகியவற்றை அறுத்தும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஓமலூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் மருது பாண்டிய நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொடூரமாகத் தாக்கி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மூதாட்டியைத் தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் அவரிடம் இருந்த 4 சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் 30 ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்து வந்த தெய்வசிகாமணி (வயது 78), அவரது மனைவி அலமாத்தாள் (வயது 74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் வயது (44) ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி (28.11.2024) இரவு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5.5 (ஐந்தரை) சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள உச்சிமேடு மேகரையான் தோட்டம் என்ற இடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ராமசாமி (வயது 72) மற்றும் பாக்கியம் (வயது 63) ஆகிய வயதான தம்பதியரைக் கடந்த மாதம் 28ஆம் தேதி (28.04.2025) கொலை செய்து சுமார் 10.75 (பத்தே முக்கால்) சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து, விசாரணை செய்தனர். அதில் குற்றவாளிகள் இக்குற்ற சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், இக்குற்றவாளிகள் வேறு சில கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவை குறித்தும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.