
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடி வழக்கு தொடர்பான விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. அதில் நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம், ரூ.6,000 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘ நியோமேக்ஸ் நிதி முறைகேட்டில் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சிங்காரவேலன், பத்மநாபன், ராஜா மற்றும் செல்வக்குமார் ஆகியோர் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளனர். அவர்கள் நிபந்தனைகளை மீறி வருவதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி கூறியதாவது, ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என்பதற்கான எந்தவொரு தகவலையும் மனுதாரர் சமர்பிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையை தவிர்க்கும் போதோ அல்லது புலனாய்வு அமைப்புக்கு ஒத்துழைப்பு தராமல் இருக்கும் போது, அச்சுறுத்தல் தரும் போதோ மனுதாரர்கள் ஜாமீனை ரத்து செய்வதற்கான மனுவை தாக்கல் செய்யலாம்.
தமிழ்நாடு வைப்பாளர் பாதுகாப்பு சட்டம் இது போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவினர் இது போன்ற பிரச்சனைகள் தொடர்பாக புகார்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல என்பதை புலனாய்வு அமைப்பு நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதே தமிழ்நாடு வைப்புத்தொகையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் (TNPID) சட்டத்தின் நோக்கம்’ எனத் தெரிவித்தார்.