
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வழங்கியது.
மேலும், ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு வழங்கியது. அவ்வாறு குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பினார். குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது என்றும், ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகனையாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஐ மாறியுள்ளது என்றும், உச்சநீதிமன்றம் சூப்பர் நீதிமன்றம் போல் செயல்படுகிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அவர், ‘நாடாளுமன்றமே உயர்ந்தது. அங்கு இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே, அரசியலமைப்பு என்னவாக இருக்கும் என்பதற்கான உச்சபட்ச எஜமானர்கள். அவர்களுக்கு மேல் எந்த அதிகாரமும் இருக்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை ஒருபோதும் நிறுத்தி வைக்க முடியாது’ எனத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், அரசியலமைப்பு சட்டம் தான் உயர்ந்தது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பட்டியலின வகுப்பில் இருந்து இரண்டாவது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர்.கவாய்க்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது. மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் உரையாற்றிய தலைமை நீதிபதி, மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் மும்பை காவல் ஆணையர் ஆகிய மூன்று முக்கிய அதிகாரிகள் இல்லாததை சுட்டிக்காட்டினார். அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது, “ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவை சமமானவை. நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தான் உயர்ந்தது. ஒவ்வொரு அரசியலமைப்பு நிறுவனமும், மற்ற நிறுவனங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் இந்திய தலைமை நீதிபதியாகி முதல் முறையாக மகாராஷ்டிராவிற்கு வருகை தரும் போது, மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் அல்லது மும்பை காவல் ஆணையர் அங்கு இருப்பது பொருத்தமானதாக இல்லை என்று நினைத்தால், அவர்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். நெறிமுறைகள் புதிய ஒன்றல்ல, ஒரு அரசியலமைப்பு அமைப்பு மற்றொரு அமைப்புக்கு அளிக்கும் மரியாதையைப் பற்றிய கேள்வி.
ஒரு அரசியலமைப்பு நிறுவனத்தின் தலைவர் முதல் முறையாக மாநிலத்திற்கு வருகை தரும்போது, அவர்கள் நடத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நம்மில் யாரேனும் ஒருவராக இருந்திருந்தால், பிரிவு 142 பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கும். இவை சிறிய விஷயங்களாகத் தோன்றலாம், ஆனால் பொதுமக்களுக்கு அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறினார். நாடாளுமன்றம் தான் உயர்ந்தது என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்த நிலையில், ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் சமம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் திட்டவட்டமாக கூறியுள்ளார்.