Skip to main content

குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசார்; நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!

Published on 21/05/2025 | Edited on 21/05/2025

 

police quickly found the culprits so CM mk stalin personally praised them

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் அருகே உள்ளது சேமலைக்கவுண்டன்பாளையம். இங்கு வசித்து வந்த தெய்வசிகாமணி (வயது 78), அவரது மனைவி அலமாத்தாள் (வயது 74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் வயது (44) ஆகியோர் 28.11.2024 அன்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட்டனர். அவர்களிடமிருந்து 5.5 (ஐந்தரை) சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அதே போன்று ஈரோடு மாவட்டம். சிவகிரியில் உச்சிமேடு மேகரையான் தோட்டம் என்ற இடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ராமசாமி (வயது 72) மற்றும் பாக்கியம் (வயது 63) ஆகிய வயதான தம்பதியரை கொலை செய்து சுமார் 10.75 (பத்தேமுக்கால்) சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து, விசாரணை செய்தனர். அதில் குற்றவாளிகள் இக்குற்ற சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், இக்குற்றவாளிகள் வேறு சில கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவை குறித்தும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குற்றசம்பவங்களை விரைந்து, புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தது, கோயம்புத்தூர் மேற்கு மண்டலம் காவல்துறை தலைவர் த. செந்தில்குமார், கோயம்புத்தூர் சரக காவல் துணைத் தலைவர் வி. சசிமோகன் ஆகியோர் தலைமையிலான புலனாய்வு குழு ஆகும்.

இக்குழுவில் இடம் பெற்ற ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. சுஜாதா, பெருந்துறை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆர். கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  தீரஜ்குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் சொ. டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

சார்ந்த செய்திகள்