
'ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 16 நாள் வேலை போதாது: ஊரக வேலைத் திட்ட பணி நாட்களை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்' என பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2025-26ஆம் ஆண்டில் 12 கோடி மனித நாள் வேலைகளும், அதற்கான நிதியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 43 கோடி மனிதநாள்கள் வேலை தேவைப்படும் நிலையில், அதில் சுமார் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல.
2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு மொத்தம் 41 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்டது. அவற்றில் 40.87 கோடி மனித நாள் வேலை மக்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு இருந்தும் கூட ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வேண்டி பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு சராசரியாக 59 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. 3.97 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் வறுமையை ஒழிக்க இது எந்த வகையிலும் போதுமானதல்ல.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 20 கோடி மனித நாள்கள் மட்டுமே மத்திய அரசு வேலை வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டில் தமிழக அரசால் மொத்தம் 30.61 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஊதியம், பொருள்களுக்கான செலவு என ரூ.3,850 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது.
அதனால், பணி செய்த ஏழை மக்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படாத நிலையில் நடப்பாண்டில் வெறும் 12 கோடி மனித நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் போதுமானதல்ல. தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி செய்வதற்காக விண்ணப்பித்து அட்டை பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 85 லட்சம். அவர்களில் தொடர்ந்து பணி செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை 75 லட்சம் ஆகும். தொடர்ந்து பணி செய்யும் குடும்பங்களுக்கு மட்டும் வேலை கொடுத்தால் கூட, ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 16 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும்.
தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு வெறும் 16 நாள்களுக்கு மட்டும் வேலை வழங்குவதன் மூலம் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்க முடியாது; வறுமையையும் போக்க முடியாது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாள்கள் வேலைவழங்க 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படுவதால், அந்த அளவுக்கு வேலை நாள்களை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.