
புகழ்பெற்ற 'இருட்டுக்கடை' அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் என்ற தொழிலதிபருக்கும் பிப்ரவரி 12 ஆம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சில நாட்களிலேயே இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கனிஷ்காவின் கணவர் பல்ராம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்திருந்தார்.
முதல்வரின் சிறப்புப் பிரிவு மற்றும் திருநெல்வேலி நகர காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்ட அந்த புகாரில் புகழ்பெற்ற அல்வா கடையின் உரிமையை தங்களிடம் ஒப்படைக்க பால்ராமின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகார் மனுவின் அடிப்படையில் இன்று (21/04/2025) காலை 10 மணிக்கு பல்ராம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நேரிலும், தபாலிலும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பல்ராம் தரப்பில் அவரது வழக்கறிஞர் பரிமளம் என்பவர் ஆஜராகி இருந்தார். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமான வேலைகள் இருப்பதால் பல்ராம் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் அவரது வழக்கறிஞர் பரிமளம்.