
சென்னை மெரினாவில் குதிரை சவாரி தொழில் செய்பவர் ராஜேஷ். கடந்த மாதம் மெரினா கடற்கரை சாலையில் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தை ராஜேஷ் உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். அவர்களின் சாட்சியின்படி கொள்ளையன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன் கோகுல், ராஜேஷை கொல்ல நினைத்துள்ளான். அதனால் ராஜேஷை தேடி சென்றுள்ளான். வீட்டில் ராஜேஷ் இல்லாததால், வழியில் பறக்கும் ரயில் பாலத்தின் கீழே நின்றிருந்த குதிரையின் கழுத்தை அறுத்துள்ளான். இதில் அலறியபடி குதிரை துடிதுடித்தது. விசயத்தை கேள்விப்பட்டு வந்த ராஜேஷ், குதிரையை உடனடியாக வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தார். ஆபத்தான நிலையில் இருந்த குதிரை 50 தையல் போடப்பட்டு காப்பாற்றப்பட்டது.
மெரினா போலீசார் குதிரையின் கழுத்தறுக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதேபகுதியை சேர்ந்த கோகுல் என்கிற வழிப்பறி கொள்ளையன் அவனது கூட்டாளிகளுடன் வந்து குதிரையின் கழுத்தறுத்தது தெரியவந்தது. இதையடுத்து கோகுலின் கூட்டாளிகள் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான கோகுலை தேடி வருகின்றனர்.