கரூரில் திமுக சார்பில் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாட்டு வண்டி போட்டி, இரத்த தான முகாம், கிரிக்கெட் போட்டி, அனாதை இல்லங்களுக்கு உணவளித்தல் என நிறைய நலத்திட்ட உதவிகளை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முரசொலி அறக்கட்டளை தலைவரும் திமுக தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகள் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘’திமுக தலைவர் கலைஞர் மறைவிற்குப் பிறகு அவருடைய மகன் ஸ்டாலினை அடுத்து அவருடைய மகன் உதயநிதி வருகின்றார் என முதல்வர் பழனிசாமி கூறிவருகின்றார்.
கலைஞர், ஸ்டாலின் பற்றி முதல்வருக்கு பேச தகுதி கிடையாது. அவர்கள் எல்லோரும் கட்சிக்காக உழைத்தவர்கள். என்னை பொருத்தவரை திமுகவின் கடைக்கோடி தொண்டனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
10 மாத குழந்தை தவழ்ந்து செல்வது போல் தவழ்ந்து சென்று வணங்கி வாழ்ந்தவர்கள், பதவிக்காக பிச்சை எடுத்தவர்கள் திமுகவை பற்றியும் திமுக தலைமை பற்றியும் பேச தகுதி இல்லை. அதிமுகவினரை கடுமையாக விமர்சித்த ஒரு கட்சி தான் அவர்களுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது.
அது ஒரு மானங்கெட்ட கூட்டணி. அதிமுக மீது ஊழல் புகார் சொன்னவர்களே இப்போது அவர்களுடன் சேர்ந்து விட்டனர் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைப்பது திமுக இயக்கம் மட்டும்தான். மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர்.
விரைவில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. 21 சட்டசபை இடைத்தேர்தலும் வரப்போகிறது. 40 எம்பிக்களை மட்டுமின்றி எம்எல்ஏ களையும் நாம் பெறுவோம். கலைஞர் முதல் முதலாக போட்டியிட்ட கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் என்று உதயநிதி பேசினார்.
முன்னாள் எம்பி கே. சி .பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.