Skip to main content

விடியற்காலை வரை மீட்டிங்; மிரட்டிய டி.எஸ்.பி -  கண்டுகொள்ளாத எஸ்.பி?

Published on 10/04/2025 | Edited on 10/04/2025

 

Problem regarding Gudiyatham DSP meeting

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் கோட்டத்தின் கீழ் குடியாத்தம் நகர காவல்நிலையம், குடியாத்தம் கிராமய காவல்நிலையம், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்நிலையம், கே.வி.குப்பம், பரதராமி காவல்நிலையம், பேரணாம்பட்டு, மேல்பட்டி காவல்நிலையம் என 7 காவல்நிலையங்கள், குடியாத்தம் போக்குவரத்து காவல்நிலையம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போன்றவை குடியாத்தம் சப் டிவிஷன் கீழ் வருகின்றன.

குடியாத்தம் கோட்டம் பெரியளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதிகள் அல்ல என்பதால் இங்கு பணியாற்ற காவல்துறையில் பலரும் விரும்புவார்கள். தற்போது குடியாத்தம் டி.எஸ்.பியாக இருப்பவர் ராமச்சந்திரன். வாரம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை சப்டிவிஷன் அளவிலான சட்டம் ஒழுங்கு கூட்டத்துக்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள், நீதிமன்றத்துக்கு செல்லும் ஏட்டுக்களை குடியாத்தத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு இரவு 10 மணிக்கு வரவைத்து ஆய்வு நடத்துவார். இந்த ஆய்வுக்கூட்டம் நள்ளிரவு தாண்டி விடியற்காலை 3 மணி வரை நடத்துவதாக கூறப்படுகிறது. இதனால் இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் மறுநாள் காலை மீண்டும் காவல்நிலையம் சென்று பணியாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் காவல்நிலைய அதிகாரிகள் சிக்கிக்கொண்டுள்ளதாக புலம்புகின்றனர்.

கடந்த வாரம் இறுதியில் அப்படியொரு ஆய்வுக்கூட்டம் குடியாத்தம் டி.ஸ்.பி கேம்ப் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் குடியாத்தம் ஊரக காவல்நிலைய ஆய்வாளர் சாந்திக்கு நெஞ்சுவலி வந்து வலியால் கதறி கீழே விழுந்துள்ளார். அவரை சக அலுவலர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சேர்த்து சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த கூட்டத்தில் ஆய்வாளர் சாந்தியிடம், “நள்ளிரவில் கூட்டம் நடத்துறேன். அந்த கூட்டத்தில் மயங்கி விழுந்துட்டன் அப்படின்னு செய்தி போட வைக்கிறீயா... உன்னை ஒழிச்சிடுவேன்..” என எஸ்.பி முன்னாடியே சத்தம் போட்டிருக்கிறாராம். அவரின் மிரட்டலால் பயந்துபோன அந்த பெண் ஆய்வாளர், ‘சத்தியம்மா நான் சொல்லலை சார்..’ என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். டி.எஸ்.பி மிரட்டுவதை கண்டுகொள்ளாமல் எஸ்.பி மதிவாணன், “உடம்ப பார்த்துக்குங்க..” என ஆய்வாளருக்கு ஆறுதல் சொல்லி கடந்து சென்றுள்ளாராம்.

“ஒன்பது காவல்நிலைய அதிகாரிகள் டி.எஸ்.பி அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்காங்க, அவர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களும் இருக்காங்க. அவுங்க மூலமா ஒரு ஆய்வாளர் மயங்கி விழுந்த தகவல் வெளியில போயிருக்கலாம் அப்படிங்கற எண்ணம்கூட இல்லாம, சம்மந்தப்பட்ட பெண் ஆய்வாளர் தான் சொன்னாங்கன்னு மிரட்டறார், அதை எஸ்.பி வேடிக்கை பார்க்கறார். என்னை யாராலும் ஒன்னும் செய்யமுடியாதுன்னு பகிரங்கமா சொல்லி மீட்டிங்லயே மிரட்டறார் இதை என்னன்னு சொல்றது.

ஆய்வுக்கூட்டத்தை இரவு 7 மணியில் இருந்து 10 அல்லது 11 வரை கூட நடத்தட்டும். நள்ளிரவு தாண்டி விடியற்காலை வரை ஒவ்வொரு கூட்டத்தையும் நடத்துவது எந்த விதத்தில் சரியானது? கூட்டம் முடிந்தபின் நாங்கள் எங்கள் குடியிருப்புக்கு செல்லவேண்டும், அப்போது விடிந்திருக்கும். அப்படியே குளிச்சிட்டு ஸ்டேஷனுக்கு போய் வேலை பார்க்கனும். எங்கள் நிலையை புரிந்துகொள்ளாமல் வேலை வாங்கினால் என்ன அர்த்தம்.

இதுமட்டும்மில்ல தினமும் இரவு ரவுண்ட்ஸ்க்காக ஒவ்வொரு காவல்நிலையத்தில் இருந்தும்  ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளரை டூட்டி போடுவார்கள். அவர்களை மானிட்டர் செய்ய தினம் ஒரு டி.எஸ்.பி என டூட்டி போடுகிறார்கள். இவர் டூட்டி பார்க்கும் அன்றைய இரவு, ஓப்பன் மைக்கில் கன்னபின்னான்னு பேசறார். ஒரு ஆய்வாளரை அப்படி சம்மந்தம்மே இல்லாமல் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்” என்று புலம்புகின்றனர். 

சார்ந்த செய்திகள்