
ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் அமலாக்கத்துறையினர் இன்று (18-04-25) அதிரடி சோதனை நடத்தி ரூ.30 கோடி மதிப்பிலான 60 அறைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த டிஎம் டிரேடர்ஸ், கேகே டிரேடர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள், பல போலி நிறுவனங்களை உருவாக்கி அந்நிய செலாவனி வணிகத்தில் ஈடுபட்டு பலரையும் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. ரிசர்வ் வங்கியில் அனுமதி பெறாமல் முறைகேடாக அந்நிய செலாவணியில் ஈடுபட்டு பலரையும் பணமோசடி செய்து அதன் மூலமாக பல்வேறு இடங்களில் கொல்கத்தாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட டிரேடர்ஸ்கள் சொத்துக்கள் வாங்கியிருந்தன. அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் பாம்பனில் சொகுசு ரிசார்ட்டும் இருந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில், கொல்கத்தா பிரிவு அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, டிஎம் டிரேடர்ஸ், கேகே டிரேடர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.270 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அதில், ராமேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் சொகுசு ரிசார்ட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி, ரூ.30 கோடி மதிப்பிலான 60 அறைகளை கைப்பற்றியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.