
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வந்தனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது.
ஏற்கனவே பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இந்த விவகாரமும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் ஆபாச பேச்சு பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் இன்று (18-04-25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.பி சத்யபாமா, பவானி எம்.எல்.ஏ பன்னாரி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய செங்கோட்டையன், “தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்க்கட்சித் தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார். ஒரு அமைச்சர் எப்படி பேசவேண்டுமோ அதை விடுத்து பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அமைச்சர் பொன்முடி பேசுகிறார். ஆனால் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் கற்றுக்கொண்ட பாடத்தை அதிமுக தொண்டர்கள் பின்பற்றி வருகின்றனர். இந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என அமைச்சராக பதவியேற்கும் போது உறுதிமொழி ஏற்ற பொன்முடி, இப்படி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அமைச்சர் பொன்முடி மக்களைப் பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தான் அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது” என்று பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், “ஒரு அமைச்சர், மற்றவர்களை வேதனைப்படுகின்ற அளவிற்கு குறிப்பாக பெண்களை, இழிவுப்படுத்து பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்கின்ற வகையில் தான், தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு, என்ன முடிவுகள் எடுக்க வேண்டுமோ கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் அந்த முடிவுகளை மேற்கொள்வார்” என்று கூறினார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது; அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பனிப்போர் சுற்றிச் சுழன்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் கழகப் பொதுசெயலாளர் என்று செங்கோட்டையன் பேசியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.