
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், ஆளும் திமுக மண்டல வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து மண்டலப் பொறுப்பாளர்கள் மாவட்டந் தோறும் கட்சிக்காரர்களைச் சந்தித்து அவர்களின் நிறை, குறைகளைக் கேட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மண்டலத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துச் சந்திப்பு நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி புதுக்கோட்டை வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கந்தர்வக்கோட்டை தொகுதியில் அம்பேத்கர் சிலை திறப்பு உள்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு ஆய்வுக்கூட்டம், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார். இதற்காக 2 நாட்கள் அங்கேயே தங்குகிறார். இதுகுறித்து கடந்த திங்கட்கிழமை அன்று மண்டலப்பொறுப்பாளர் அமைச்சர் நேரு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்சியினரை சந்திக்கத் திட்டம் தீட்டியிருந்தார். அது நடக்காமல் போனது. ஆனால் அந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமையும் தள்ளிப்போனதால் இன்று புதன்கிழமை மாவட்ட செயற்குழு கூட்டமாக நடத்தப்படுகிறது.
மற்ற மாவட்டங்களில் கட்சியினரை முழுவமையாக சந்தித்த மண்டலப் பொறுப்பாளர் புதுக்கோட்டையில் செயற்குழுவை மட்டும் சந்திக்கிறார் என்று உடன்பிறப்புகள் மத்தில் சலசலப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சில கட்சியின் உடன்பிறப்புகள், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்கட்சி பூசல்கள் உச்சத்தில் உள்ளது. உ.பிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். அதே போல மாநகரச் செயலாளர் பொறுப்பு போட்டதில் வட்டச் செயலாளர்கள் முழு அதிருப்தி. மாநகர பொறுப்பாளரை மாற்றுங்கள் என்று மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்கள் அறிவாலயம் வரை சென்று தலைவர் மு.க.ஸ்டாலினிடமே புகார் கொடுத்தனர். உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில் 2 மாதம் கடந்தும் மாற்றமில்லை. அதனால் தான் 2 வாரம் முன்பு நடந்த உள்கட்சி கூட்டத்திலும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அதனால் மாநகரப் பொறுப்பாளர் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் தான் கட்சிக் கூட்டமாக நடத்தினால் கொந்தளிப்பாகும் என்பதால் தான் மாவட்ட செயற்குழுவாக நடத்துகிறார்கள்.
மாநகரப் பொறுப்பாளரை மையப்படுத்தியே இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று நடக்கும் செயற்குழு கூட்டத்திற்கு வரும் மண்டலப் பொறுப்பாளர் கே.என்.நேருவை வரவேற்க வைக்கப்பட்டுள்ள பதாகையில் தொகுதி எம்எல்ஏ முத்துராஜா படமும் மாநகர மேயர் திலகவதி படமும் இல்லாமல் பதாகை வைத்துள்ளார். இதனைப் பார்த்த யாரோ மாநகரப் பொறுப்பாளர் ராஜேஸ் படத்தை வெட்டி கிழித்து தொங்கவிட்டுட்டார்கள். மேலும் மாலையில் நடக்கும் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநகரப் பொறுப்பாளரை மாற்றக் கோரி வட்டச் செயலாளர்கள் தர்ணா செய்யவும் ஆயத்தமாகி வருகிறார்கள்.
மேலும், இளைஞரணிச் செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வர உள்ள நிலையில் நகர் முழுவதும் மாநகரச் செயலாளரை மாற்றக்கோரும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்குள் நடக்கும் இந்த சம்பவங்களால் புதுக்கோட்டை பரபரப்பாகி உள்ளது.