
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. (நிறுவன) தலைவர் ராமதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராகச் செயல்படுவார்” எனப் பேசியிருந்தார். ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பா.ம.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராகச் செயல்படுவேன்” என பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.05.2025) வன்னியர் சங்கம் சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் கடுமையாகச் சாடியிருந்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது கடந்த 16ஆம் தேதி (16.05.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 மாவட்டச் செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் பா.ம.க.வின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று (21.05.2025) தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில்,“நல்ல பதிலை அவர்கள் இருவரும் சொல்லப் போகிறார்கள். நீங்கள் அதைப் பார்க்கப் போகிறீர்கள். இது மிக விரைவில் நடைபெறும். சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. கட்சி எந்த வகையிலும் நிலை குலையாது. நலிந்து போகாது. மேலும் வளமாக இருக்குமே தவிர எந்த வகையிலும் பாதிக்காது. 2 பேரின் சந்திப்புக்குப் பிறகு வெறி வேகமாக மாறும், வீரியமாக மாறும்” எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “அன்புமணி ராமதாஸ் உங்களை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை” எனக் கேட்டார்.
அதற்கு அவர், “(அன்புமணி) வருவார், கலந்துக்குவாரு, வந்து கலந்துக்குவாரு இனிமேல் வந்து கலந்துவாரு” எனத் தெரிவித்தார். மேலும், “இருவருக்கும் இடையான மனக்கசப்பு நீங்கிடுச்சா?. விரைவில் இருவரும் சந்திப்பார்கள் என்று ஜி.கே. மணி சொல்லிருந்தார்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “கசப்புன்றது இல்ல. கசப்புன்றது எப்பொழுதும் நான் சொல்லுவதுமில்லை. இனிப்பைத் தான் சொல்லுவேன். இனிப்பான செய்திகளைத் தான் நான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிட்டத்தட்ட 35 வாரம் வியாழக்கிழமை, வியாழக்கிழமை கூடினோம். கூடினோமா?, இல்லையா? அந்த 35 வாரம் வியாழக்கிழமையில் நான் இனிப்பான செய்திகளைத் தானே சொல்லி இருக்கிறேன். நான் டாக்டரா இருந்தாலும் கசப்பு மருந்து கொடுக்கறதுல்ல” எனப் பேசினார்.