
சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து போதைப் பொருட்கள் அதிகமாக விற்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர். அண்மையில் தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் இருப்பவர்களை போலீசார் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த அதேநேரம் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படும் போதைப் பொருள்கள் குறித்தும் போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 14ஆம் தேதி மொய்தீன் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் அவர் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மொய்தீன் உயிரிழந்தார். தன்னுடைய மகன் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் இறந்ததாக மொய்தீனின் தாயார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் அடிப்படையில் அமித் ஷெரிப், இனையதுல்லா, கார்த்திக் என்ற மூன்று இளைஞர்களை போதை மாத்திரைகள் பயன்படுத்தியது; தவறாக மருந்தை உடலுக்குள் செலுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சலீம் என்ற இளைஞரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.