
ஆண்டுக்கணக்காக போராடி வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என அமமும பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் ஊதியக்குழுக்களின் தவறான நிர்ணயத்தால் பணியில் இருந்து ஓய்வு பெற பத்தாண்டு காலம் மீதமிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்ட தொடர் போரட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இடைநிலை ஆசிரியர்களின் ஒவ்வொரு போராட்டத்தின் போதும், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், பின்னர் ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைப்பதும் என எந்தவித தீர்வையும் காணாமல் தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவது ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் திமுக அரசு இழைக்கும் அநீதி ஆகும்.
எனவே, ஆண்டு ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஆண்டுக்கணக்காக போராடி வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.