
தமிழ்நாட்டில் உழவுத் தொழிலை மட்டும் எடுத்துக் கொண்டால் 2024-25ஆம் ஆண்டில் மைனஸ் 5.93% என்ற அளவுக்கு வீழ்ச்சி விரிவடைந்திருக்கிறது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09% என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாட்டு மக்களில் 60 விழுக்காட்டினரின் வாழ்வாதாரமாகத் திகழ்வது உழவு தான் எனும்போது அதன் வளர்ச்சிக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முன் 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தின் வேளாண்துறை மைனஸ் 1.61 என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. அதன்பின் கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்த நிலையில், கடந்த ஆண்டில் தான் முதன்முறையாக தமிழகத்தின் முதன்மைத்துறை வீழ்ச்சியடைந்திருக்கிறது.
வேளாண்துறை வளர்ச்சி என்பது உழவுத்தொழிலின் முன்னேற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதில்லை. விவசாயம், கால்நடை வளர்ப்பு, காடு மற்றும் மரம் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கடல் வேளாண்மை ஆகியவையும் இணைந்தது தான் வேளாண்மைத் துறை ஆகும். இவற்றில் வேளாண்மை தவிர பிற துறைகள் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளன. அதன் காரணமாகத் தான் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09% என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. உழவுத் தொழிலை மட்டும் எடுத்துக் கொண்டால் 2024-25ஆம் ஆண்டில் மைனஸ் 5.93% என்ற அளவுக்கு வீழ்ச்சி விரிவடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உழவுத் தொழில் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு இதை விட சிறந்த சான்று தேவையில்லை.
தமிழ்நாட்டில் வேளாண்துறை எதிர்மறை வளர்ச்சி அடைந்திருப்பதற்கு திமுக அரசு தான் காரணமாகும். உழவுத்தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால், அத்தொழிலில் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உழவர்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும். ஆனால், அந்த நம்பிக்கையை ஏற்படுத்த திமுக அரசு தவறி விட்டது. 2024-25ஆம் ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களுமே உழவர்களுக்கு கடும் பாதிப்பைத் தான் ஏற்படுத்தின.மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், காவிரி பாசன மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதிலும், போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் வழக்கமான அளவில் பயிரிடப்பட்ட போதிலும், புயல் காரணமாக பெய்த மழையால் மூன்றுமுறை கடுமையான மழை மற்றும் வெள்ளத்தில் பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், அவற்றுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கவில்லை.
நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500ஆக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதில் 60 விழுக்காடு மட்டும் தான் கொள்முதல் விலை வழங்கப் படுகிறது. இது தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினால், 2021-ஆம் ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை 2026ஆம் ஆண்டில் நிறைவேற்றி விடுவோம் என்று திமுக அமைச்சர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை கிண்டல் செய்கின்றனர். வேளாண் வளர்ச்சிக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
2024 - 25ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் 9.69% வளர்ச்சி அடைந்து விட்டதை கோடிக்கணக்கில் செலவழித்துக் கொண்டாடிய திமுக அரசு, வேளாண்துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஒப்புக் கொண்டு, நடப்பாண்டிலாவது வேளாண்துறையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த நேர்மை திமுக அரசுக்கு சிறிதளவு கூட இல்லை. மாறாக, இந்த உண்மையை மறைக்கும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் வேளாண்துறை சராசரியாக 5.66% வளர்ச்சி அடைந்ததாகக் கூறி பொய்யாக பெருமை தேடத் துடிக்கிறது.
தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 60 விழுக்காட்டினர் வேளாண்மையைத் தான் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். வேளாண் தொழில் வளர்ந்தால் தான் அந்த 60% மக்களும் முன்னேறுவார்கள். அவர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது. எனவே,வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண் வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.