
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அபு சைபுல்லா கலீத் இன்று பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். லஷ்கர் -இ- தொய்பா அமைப்பின் தலைவராக இருந்த அபு சைபுல்லா கலீத் கடந்த 2005 ஆம் ஆண்டு பெங்களூரூவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு தாக்குதல், 2006 நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் மீதான தாக்குதல், 2008 ஆம் ஆண்டு காஷ்மீர் ராம்பூரில் நடந்த சி.ஆர்.பி.எஃப் முகாம் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா இவரைத் தேடப்படும் குற்றவாளிகாக அறிவித்த நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பு தீவிரமாக தேடிவந்தது. ஆனால், பயங்கரவாதி அபு சைபுல்லா கலீத் நேபாளத்தில் வினோத்குமார் என்ற போலி பெயரில் அந்நாட்டை சேர்ந்த நக்மா பானு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் இருந்து பாகிஸ்தான் சென்ற அபு சைபுல்லா கலீத் சிந்து மாகாணத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் பிடின் மாவட்டம் மத்லி பகுதியில் பயங்கரவாதி அபு சைபுல்லா கலீத் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த பகுதியில் கலீத் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.