ஆதீனங்கள்,மடங்கள், என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது என்பார்கள். அந்த வகையில் தருமபுரம் ஆதீனத்தின், புதிய ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேச விவகாரமும் பரபரப்பை உண்டாக்கி தணிந்திருக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ளது தருமபுரம் ஆதீனம். பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் அந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்தா ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த டிசம்பர் 4 ம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பதவியேற்று ஞானபீடத்தில் அமர்ந்தார்.

அன்றைய தினமே தருமபுரத்தில் ஏற்பாடு மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழச்சி நடந்தது, வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலாவந்தார். அந்த பல்லக்கை அதற்காக ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்துவந்தார்கள். அந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடந்தது.

இந்தநிலையில் மனிதனை மனிதர்களை கொண்டு பல்லக்கு தூக்கும் முறை எனும் பழமையான அடிமை முறையை கண்டித்து, திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்துக்கு சொந்தமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும்போது போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி பிப்ரவரி 12 ம் தேதி திருப்பனந்தாள் காசிமடத்திற்கு வருகைதரவிருந்தார், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து "மனிதர்களை சுமக்கும் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் செய்யக்கூடாது மீறி செய்தால் திராவிட கழகம் சார்பில் கறுப்புக் கொடி காட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழக நிர்வாகிகளும், நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அவரவர் கட்சி கொடிகளுடன் திரண்டிருந்தனர்.

மாலை 7 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் காரில் வந்து அங்குள்ள விநாயகர் சன்னதியில் இறங்கினார். அவருக்கு காசி மடம் சார்பில் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் வரவேற்று கோயிலுக்குள்ளும், மடத்துக்குள்ளும் நடந்தை அழைத்துச் சென்றார். அப்போது பட்டின பிரவேசத்திற்கான வெள்ளி பல்லாக்கு ஏதுமில்லாமல் நடந்தை சுற்றியுள்ள வீதிகளிலும் சென்றார்.
இது குறித்து ஆதீன வட்டாரத்தில் விசாரித்தோம்," பட்டின பிரவேசம் நடைபெற்றால் போராட்டம் நடத்தப்படும் என்ற தகவல் தருமபுரம் புதிய ஆதீனகர்த்தருக்கு தெரிந்தது, அவரும் சுயமரியாதையோடு பயணித்தவர் என்பதால், அது மரபாகத்தான் ஏற்றுக்கொண்டேனே தவிர, கட்டாயப்படுத்தவில்லை, பல்லக்கினால் விவகாரம் வரும் என்றால் அதை தவிர்த்துவிடலாம் என காசிமடம் நிர்வாகிகளுக்கு கூறியதால், பட்டினப்பிரவேசம் பல்லாக்கு இல்லாமல் இனிதே முடிந்துள்ளது."என்கிறார்கள்.

இதற்கிடையில் மாலை நான்கு மணிக்கு திரண்ட திராவிடர் கழகத்தினருக்கு ஆதின தரப்பில் இருந்து பல்லக்கு முறை இல்லை என அறிவித்ததால், போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்தும், பெரியார், அம்பேத்கர் புகழ் வாழ்க என்றும் தருமபுரம் ஆதீனகர்த்தருக்கு நன்றி என்றும் கூறி முழக்கமிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
போராட்டம் நடைபெறும் என்பதால் முன்கூட்டியே போலீசார் குவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தனர்.