
தை மாதம் பிறக்கப் போகிறது என்பதால் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்க பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் நீதிமன்றத்தை நாடிக்கொண்டிருக்க, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த காளைகளுக்கு பயிற்சியும் வாடிவாசல் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. மற்றொரு பக்கம் தமிழ்நாட்டிலேயே அதிகமான ஜல்லிக்கட்டுகள் நடக்கும் வாடிவாசல்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் காளைகளுக்கு பயிற்சி கொடுத்து வரும் அதே நேரத்தில் நிரந்தர வாடிவாசல் அமைக்கும் பணியில் உள்ளனர்.
ஆலங்குடி அருகில் உள்ள வன்னியன்விடுதி கிராமத்தில், தை 3 ஆம் நாள், மாயன் பெருமாள் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் ஒவ்வொரு வருடமும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 700 காளைகள் பங்கேற்கும். உள்ளூர் காளைகள் 60 முதல் 70 காளைகள் பங்கேற்கும். கடந்த ஆண்டு 703 காளைகள் பங்கேற்றது. அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு வாடிவாசலுக்கு வரிசையாக காளைகளைக் கொண்டு வர நிரந்தரமாக இரும்புத் தடுப்பு வழிகள் ஏற்படுத்தியிருந்த நிலையில், நடுவர்கள், விஐபிகள், விழாக்குழுவினர் நிற்கும் உயரமான மேடையை நிரந்தமான காங்கிரீட் மேடையாக அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அமைச்சர் மெய்யநாதன் தனது ஆலங்குடி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து, உயரமான நிரந்தர வாடிவாசல் காங்கிரீட் மேடை அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இது தான் நிரந்தர காங்கிரீட் மேடை என்று கூறும் கிராம மக்கள், மேடையின் மேலே இரு காளைகளின் சிலைகள் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தனர். தை முதல் நாள் வாடிவாசல் மேடை திறப்பு விழாவும் 3 ஆம் நாள் ஜல்லிக்கட்டும் நடக்க உள்ளது. சிறந்த காளைகளுக்கும் சிறந்த காளையர்களுக்கும் பரிசுகளும் காத்திருக்கிறது என்கின்றனர்.