
மாணவர்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்க ரோகித் வெமூலா சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு எழுதிய அந்த கடிதத்தில், ‘டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எதிர்கொண்டது வெட்கக்கேடானது. அதை இந்தியாவில் எந்தக் குழந்தையும் தாங்கிக் கொள்ளக்கூடாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். இன்றும் கூட பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் நமது கல்வி முறையில் இத்தகைய கொடூரமான பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டியிருப்பது அவமானகரமானது.
பாபாசாகேப் அம்பேத்கர், கல்விதான் முதன்மையான வழிமுறையாகக் கருதி, மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள் கூட அதிகாரம் பெறவும், சாதி அமைப்பை உடைக்கவும் முடியும் என்பதை நிரூபித்தார். ஆனால் பல தசாப்தங்களுக்குப் பிறகும், லட்சக்கணக்கான மாணவர்கள் நமது கல்வி முறையில் சாதி பாகுபாட்டை எதிர்கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தப் பாகுபாடு ரோஹித் வெமுலா, பயல் தத்வி மற்றும் தர்ஷன் சோலங்கி போன்ற நம்பிக்கைக்குரிய மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது. இந்த மரணங்களை கொடூரமான சம்பவங்கள். இதுபோன்ற அநீதியை எந்த நேரத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது .
இதற்கு உறுதியான முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ரோஹித் வெமுலா மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அனுபவித்த சாதியத்தை இந்தியாவின் எந்தக் குழந்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடாது என்பதற்காக, கர்நாடக அரசு ரோஹித் வெமுலா சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோஹித் வெமுலா என்ற பட்டியலின மாணவர், பல்கலைக்கழகம் கொடுத்த சாதிய அடக்குமுறையால் கடந்த 2016ஆம் தேதி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.