
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகிய நபரை நம்பி அழைப்பின் பேரில் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவனிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகிய நபரை நம்பி சென்ற நிலையில் முத்தியால்பேட்டை பகுதிக்கு வரவழைத்து அந்த நபர் ஆட்டோ மூலம் கடத்திச் சென்று ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வைத்து மாணவனை மிரட்டியதாக கூறப்படுகிறது. மாணவனிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் அவரிடம் இருந்து தங்க நகைகளை கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மாணவன் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் வசந்த் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் சிலர் இருப்பதாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சித், விஜயகுமார், ஈஷா ஆனந்த் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் விஜயகுமார் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் வசந்த்திடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் நடத்திய விசாரணையில் இவர்கள் இதேபோல உயர் ரக இருசக்கர வாகனங்களில் சுற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து கடத்தி பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.