Skip to main content

ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல்; 74 பேர் பலி

Published on 19/04/2025 | Edited on 19/04/2025

 

US strikes Yemen port

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து,  இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 50,00க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இந்த போரால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. மேலும், இந்த போர் உலகையே களங்கடிக்க செய்தது. 

பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பு களமிறங்கி, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதி, அமெரிக்காவின் சரக்கு கப்பல் ஆகியவற்றின் மீதும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 15ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி, ஹவுதி பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா கடுமையான நடவடிக்களை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில், ஏமனில் உள்ள ராஸ் இசா துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 74 பேர் பலியாகியுள்ளதாகவும், 171 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய படை கூறுகையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் மற்றும் வருவாய் கொடுக்க கூடிய விசயங்களை அழிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்து, இந்த தாக்குதலை நடத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்