Skip to main content

காணாமல்போன குளத்தை கண்டுபிடித்து கொடுக்க ஆட்சியர் முதல் விஏஓ வரை தேவை... சுவரொட்டியால் பரபரப்பு!!

Published on 25/08/2019 | Edited on 26/08/2019

ஆட்கள் தேவை என்று கறம்பக்குடி பகுதில் ஒட்டப்பட்டுள்ள துண்டறிக்கைகளைப் பார்த்த வேலை தேடும் இளைஞர்கள் வேகமாக சென்று படிக்க அதிர்ச்சியுடன் திரும்புகின்றனர். அப்படி அந்த துண்டறிக்கையில் என்னதான் உள்ளது?

ஆட்கள் தேவை என்ற தலைப்பிட்ட துண்டறிக்கையில் கறம்பக்குடி தாலுகா குளந்திராண்பட்டு கிராமத்தில் சர்வே எண் 244 ல் உள்ள வெட்டுக்குளத்தை காணவில்லை. மத்திய புலனாய்வுத்துறை மூலமாகவாவது கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், கிராம நிரவாக அலுலர்கள் தேவை என்றும் இதற்கு கல்வி தகுதியாக சுயமரியாதை தன்னொழுக்கம் தேவை எனவும் கண்டிப்பாக பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என்றும் உள்ளது.

 

pool

 

இந்த துண்டறிக்கையை கருத்தாய்வுக்குழு வெளியிட்டுள்ளதாக கீழே உள்ளது. இதனால் தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது.. நிலத்தடி நீர் கீழே செல்கிறது. நீரை சேமிக்கும் ஆறு, குளம், வாரிகள் களவு போய் விட்டது. தினமும் அக்னி ஆற்றில் பொக்கலின் வைத்து டாரஸ் லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. வருவாய் முதல் காவல்துறை வரை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மாமூல் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். லஞ்சமாக வாங்கும் பணத்தில் தண்ணீர் வாங்கி குடிக்கிறார்கள். ஆனால் பாவப்பட்ட ஏழை மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

 

pool

 

இந்தநிலையில்தான் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, கீரமங்கலம், பேராவூரணி, ஒட்டங்காடு, குருவிக்கரம்பை, நாடியம் இப்படி பல கிராமங்களில் இளைஞர்களே குளங்களை சீரமைக்கிறார்கள். அதற்கும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை.

இந்த நிலையில கறம்பக்குடி தாலுகா குளந்திரான்பட்டு கிராமத்தில் புல எண் 244 ல் 3 ஹெக்டேர் 6 ஏக்கர்ஸ் பரப்பளவுள்ள வெட்டுக்குளம் வரைபடத்தில் மட்டும் இருக்கு ஆனால் குளத்தை காணும். அதிகாரிகளிடம் மனு கொடுத்து குளத்தை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்டும் பயனில்லை அதனால தான் இப்படி ஒரு சுவரொட்டி என்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்று அதிகாரிகளுக்கு பலமுறை உத்தரவிட்டும் மாவட்டம் முழுவதும் இதேநிலைதான்..

     

 

சார்ந்த செய்திகள்