Skip to main content

அறுவடை முடியும் வரை வீராணத்தில் இருந்து தண்ணீர் கிடைக்குமா? விவசாயிகள் ஏக்கம்

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

 

vee


கர்நாட மாநிலத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. பின்னர் அணையில் கடந்த 19-ந்தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதியான கீழணைக்கு வந்தது. அதனைதொடர்ந்து கீழணையில் போதுமான தண்ணீரை வைத்து கொண்டு கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரிக்கு திறந்து விட்டுள்ளனர். வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் கடந்த 26-ந்தேதி முதல் வந்து கொண்டு இருக்கிறது.

  

இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து சனிக்கிழமை( ஆக 4-ந்தேதி) நிலவரப்படி 44 அடியை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரி நிரம்பி வருவதால் விவசாய பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாக விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் டெல்டாவின் கடைமடை வரை உள்ள விளைநிலங்கள் பாசனம் பெறும். மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பூதங்குடி நீரேற்று நிலையம் வழியாக. வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகிறார்கள். 

 

இது குறித்து வீராணம் ஏரியின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மாதவன் ஆகியோர் பல ஆண்டுகள் கடந்து தமிழகத்தில் மழையே இல்லாத நேரத்தில் வீராணம் ஏரி நிரம்புவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது வரும் நீரை ஏரியின் முழுகொள்ளளவில் தேக்கிவைத்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் இந்த ஆண்டு மழை இருக்குமா? என்று சரியாக சொல்ல முடியவில்லை. எனவே விவசாய தேவைக்கு பிறகு சென்னைக்கு குடிநீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் உள்ள பெரும்பாண்மையான நிலங்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் காய்ந்தே கிடக்கிறது. தற்போது தண்ணீர் வந்துள்ளதையொட்டி விவசாயிகள் கடனை வாங்கி விவசாயம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். ஆனால், அறுவடை முடியும் வரை வீராணத்தில் இருந்து தண்ணீர் கிடைக்க உத்திரவாதம் கிடைக்குமா என்று ஏங்கித்தவிக்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்