
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவோம்..’ என்று பேசியதாலோ என்னவோ, விருதுநகர் சிபிசிஐடி போலீசார் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்பை நாள்தோறும் காட்டி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, பாதிப்புக்கு ஆளானதாகப் புகாரளித்த பெண்ணை யார் கண்ணிலும் படவிடாமல் பொத்திப் பாதுகாத்து வருவது, விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது.
அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியளிக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் படையெடுத்து, திமுகவுக்கு எதிரான அரசியலை வலுவாகக் கையிலெடுத்துவிடக்கூடாது என ஆளும்கட்சி ‘பிரேக்’ போட்டதாலேயே, சிபிசிஐடி போலீசார் அதற்கேற்ப நடந்துவருகின்றனர்.
விசாரணையை ஓரிரு நாட்களில் முடித்து, அந்தப் பெண்ணை வெளியில் சுதந்திரமாக நடமாடவிட்டு, மீடியாக்கள் அவரைச் சந்தித்து கேள்விகளால் துளைத்தெடுத்து, அந்தப் பெண்ணும் ‘உள்ளது உள்ளபடி’ பேசி, உண்மைகள் அத்தனையும் வெளிவந்துவிட்டால், ‘கைதான சிறார்கள் அய்யோ பாவம்!’ என்ற கரிசனம் பொது ஜனத்திடமிருந்து வெளிப்பட்டுவிடுமே. அரைகுறையாக வழக்கு பதிவு செய்த காவல்துறையின் முகத்திரை கிழிந்துவிடுமே’ என்ற அச்சத்தாலேயே, பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளிகளையும் கையாளும்போது, சிபிசிஐடி போலீசார் போடும் ‘மூடு மந்திரம்’ அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டது ஹரிஹரனா? மாடசாமியா? என்று மீடியாக்களை சிபிசிஐடி போலீசார் குழப்பிவிட்டாலும், சிபிசிஐடி போலீசாரின் வாகனத்தை விரட்டிச்சென்று, முதல் குற்றவாளி ஹரிஹரனே அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை மோப்பம் பிடித்துவிட முடிந்தது.
குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்களில் ஒருவரான ஜுனத் அகமது, விருதுநகர் திமுக எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் காரின் முன்னால் நின்ற போட்டோ மீடியா வெளிச்சத்துக்கு வந்துவிட்ட கோபம், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தின் முன்பாக செய்தி சேகரிப்புக்காக நிற்கும் பத்திரிக்கையாளர்கள் மீது திரும்பியிருக்கிறது.
‘எந்நேரமும் விருதுநகர் எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டித்தானே கிடக்கிறது? அருகில்தானே சிபிசிஐடி அலுவலகம் இருக்கிறது? தினமும் வெயிலில்தானே காய்கிறோம்? எம்.எல்.ஏ. அலுவலகத்தின் வெளிக்கதவை மட்டும் திறந்தால் போதும். நிழலுக்கு ஒதுங்கிக்கொள்வோமே?’ என்ற எதிர்பார்ப்புக்கு எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் செவி சாய்க்கவே இல்லை.