
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) அப்பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் மீது 11 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
இதனிடையே நீதிபதியின் முன்னிலையில் ஞானசேகரன், “எனக்கு அம்மா மட்டுமே உள்ளார். அவருக்கு வயதாகிவிட்டது. எனக்குத் திருமணமாகி 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. அம்மா, சகோதரி, மகளை கவனித்துக்கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. எனவே குடும்பச்சூழலைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். என்னுடைய தொழில் பாதிக்கும் வகையில் வங்கிக் கணக்குகள் எல்லாம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை நீக்க வேண்டும்” எனக் கதறியிருக்கிறார். ஆனால் அரசு தரப்பில் இருந்து குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, “தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தண்டனை விவரத்தை ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.