
நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். தற்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''நடிகர் விவேக்கின் மறைவு பேரிழப்புதான். அவருடைய மறைவுக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை'' என்றார்.
நடிகர் விவேக் நேற்று முன்தினம் (15.04.2021) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், "அரசு மருத்துவமனைகள்தான் பெரும்பாலான மக்களுக்கு மருத்துவ சேவையைக் கொண்டு செல்கின்றன. நிறைய மக்களிடம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா, பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து நிறைய சந்தேகங்கள் உள்ளன. தடுப்பூசி போடுவதால் எந்தவித ஆபத்தும் இல்லையென பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்தோடு நான் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.