Skip to main content

‘ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/04/2025 | Edited on 21/04/2025

 

 High Court order Bail granted to Jafar Sadiq

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி (24.02.2024) 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. அதோடு ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கைது செய்தது. மேலும் இது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டியிருந்தது.

இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி (12.08.2024) விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜாபர் சாதிக்குக்கும், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோரும் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்குக்கும், முகமது சலீமும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கக் கூடாது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் வாதிடுகையில், “ஜாபர் ஜாதிக் ஆளும் கட்சியான திமுகவின் நிர்வாகியாக இருந்துள்ளார். எனவே அவர் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு உள்ளது எனவே அவருக்கும், அவரது சகோதரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (21.04.2025) நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். அதில், “டெல்லியின் முன்னாள் முதல்வர் மனிஷ் சிசோடியாவின் வழக்கை முன்னுதரனமாக கொண்டு ஜாபர் சாதிக்குக்கும், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்