வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)- 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திமுக மற்றும் அதிமுக வாங்கிய வாக்குகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும், கருத்துக்களும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தன. மேலும் கடந்த தேர்தலை விட திமுக 2,80,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது என்பதை மறைக்க அதிமுக வெளியில் முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதிமுக கூட்டணி கடந்த தேர்தலை விட 2,30,846 வாக்குகளை இழந்துள்ளது.
வேலூரில் ஏற்பட்ட தோல்வியால் எடப்பாடி கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தல் பணியில் அனைத்து அமைச்சர்களும் ஈடுபட்டும், ஆளுங்கட்சியாக இருந்தும் வெற்றி பெற முடியவில்லை என்ற கடுப்பில் தோல்விக்கு என்ன காரணம் என்று கட்சி வட்டாரங்களில் எடப்பாடி விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, அமைச்சர் கே.சி. வீரமணியின் உள்ளூர் அரசியலால் அவர் மீது அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு அமைச்சர் களப்பணி சரியாக செய்யவில்லை என்ற புகாரும் கூறிவருகின்றனர். அவரை பதவியில் இருந்தும் தூக்க வேண்டும் என்று அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறுகின்றனர். மேலும் அவர் தினகரன், சசிகலாவின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ என்ற சந்தேகம் அதிமுக தலைமைக்கு வந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர்.