Skip to main content

காங்கிரஸுக்காக வாக்கு சேகரிக்கிறதா பா.ஜ.க.? மீண்டும் உளறல்.. 

Published on 29/03/2018 | Edited on 29/03/2018

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரங்களில் பல மாதங்களாக ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.. அங்கு காங்கிரஸ் தலைமையிலான சித்தராமையா அரசை வீழ்த்தி, தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டிக்கொள்ள எந்த ஆழத்திற்கு வேண்டுமானாலும் இறங்க பா.ஜ.க. தயாராக இருக்கிறது.

 

Amit

 

ஆனால், மத்திய அரசின் மீதான அதிருப்தி, முதல்வர் சித்தராமையாவின் சமீபத்திய சில நடவடிக்கைகள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது என பா.ஜ.க. அதன் வேகத்தை கூட்டவேண்டிய கட்டாயத்தையே உணர்த்தியிருக்கின்றன.

 

களநிலவரம் இப்படியிருக்க, கர்நாடகா மாநிலம் தேவநாகரி பகுதியில் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த அமித்ஷா, ‘ஊழல் அரசுகளுக்கு என போட்டி ஒன்று நடத்தினால், அதில் எடியூரப்பா தலைமையிலான அரசு முதலிடத்தைப் பிடிக்கும்’ என வாய்குளறி பேசினார். அவர் உடனே தனது தவறை சரிசெய்துகொண்டாலும், காங்கிரஸ் கட்சியினர் ‘அமித்ஷா ஒருவழியாக உண்மை பேசிவிட்டார்’ என தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டனர்.

 

இந்த நிலையில் கர்நாடகாவில் பிரச்சார மேடையில் அமித்ஷா, ஏழை மக்களுக்கு பிரதமர் மோடி என்னென்ன செய்தார் என்ற பெருமையை இந்தியில் பேச, அதை கர்நாடக மாநில பா.ஜ.க. எம்.பி. பிரகலாத் ஜோஷி, ‘மோடி ஏழை மற்றும் தலித்துகளுக்காக இதுவரை எதுவுமே செய்யவில்லை’ என தவறாக மொழியாக்கம் செய்துவிட்டார். இதையெல்லாம் பார்க்கும்போது ‘ஒருவேளை காங்கிரஸுக்காக பா.ஜ.க. வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது’ என காங்கிரஸ் வட்டாரங்கள் இப்போதே கருத்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

சார்ந்த செய்திகள்