Skip to main content

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிர்ப்பலிக்கு பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர்தான்... -தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! 

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

 

mk stalin


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த நிகழ்வு குறித்து தனது சமூக வலைதளபக்கங்களில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஜெயராஜ், பென்னிக்ஸ் இந்த இரு பெயர்களை, கடந்த சில நாட்களில் யாரும் மறந்திருக்க முடியாது. காவல்துறையினரின் வன்முறையால், அராஜகத்தால், இந்த இருவரை நாம் இழந்து நிற்கிறோம். கடந்த இரு தினங்களாக இந்தச் சம்பவம் குறித்து வரும் செய்திகளை, புகைப்படங்களை, உறவினர்கள் கூறும் நிகழ்வுகளை, நண்பர்கள் பகிரும் சோகங்களைக் காணும்போது மனம் ஏற்க மறுக்கிறது. மீளாச் சோகமும், தீராத் துயரமும், சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இருவருக்கு ஏற்பட்ட அநீதி, என்னைத் தூங்கவிடவில்லை! இவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும், சோகமும், அநீதியும் வார்த்தைகளால் அடக்க முடியாதவை.

இந்தச் சம்பவத்தைப் பற்றி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொடூரத்தின் உச்சமாக, ஆசனவாயில் லத்தியைக் கொண்டு தாக்குதல், நெஞ்சின் மீது ஏறி நின்று மிதித்தல் என்று கேள்விப்படும் ஒவ்வொரு செய்தியும், மனதை உலுக்குகிறது. இந்த மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான செயல்கள், பேரதிர்ச்சி அளிக்கிறது. தன் கடையை ஊரடங்கு நேரத்தில் மூடுவதற்குத் தாமதம் ஆக்கினார்கள் என்ற காரணத்திற்காக இப்படிப்பட்ட தாக்குதல்களை நிகழ்த்த காவல்துறையினருக்கு யார் அனுமதி தந்தது?

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இன்னுயிருக்கு எந்த நிவாரணமும் ஈடு இல்லை. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க, தி.மு.க. சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளோம். இந்த வழக்கின் விசாரணையை வேகமாகவும், தீவிரமாகவும், நேர்த்தியாகவும் நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க, சட்ட ரீதியாகவும் தி.மு.க. துணை நிற்கும். இந்த உயிர்ப்பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர்தான். மக்கள் மன்றத்தால் விரைவில் அவர் தண்டிக்கப்படுவார்” இவ்வாறு பேசியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.