Skip to main content

சிறார் சட்டத்தில் உள்ள திருத்தம்; புனே விபத்து சம்பவத்தில் நீதிமன்றத்தை நாடும் காவல்துறை

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
 Amendment of Juvenile Act; Police moves court in Pune accident case

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் அகர்வால். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவருக்கு வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது மகன் உள்ளார். இவர் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார்.

அப்போது கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் வேந்தாந்த் அகர்வால் அதிவேகமாக ஓட்டி வந்த கார், முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு மற்றொரு காரில் விழுந்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐ.டி. ஊழியர்களான 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேந்தாந்த் அகர்வாலைப் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேந்தாந்த் அகர்வாலைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேந்தாந்த் அகர்வாலைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பீட்சா, பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 20ஆம் தேதி சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்தில் வேதாந்த் அகர்வால் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை விசாரித்த நீதிமன்றம், அவருக்குச் சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது. விபத்தை ஏற்படுத்தி ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, சிறுவனுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

தொடர் விமர்சனங்களின் விளைவாக, அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் சிறுவனின் தந்தை விஷால் அகர்வாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சிறுவன் வேந்தாந்த் அகர்வாலுக்கு மது வழங்கியதற்காக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனைப் பெரியவராகக் கருதி விசாரணை நடத்த வேண்டும் என விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாக இது குறித்து புனே மாவட்ட காவல்துறை நீதிமன்றத்தை நாடி உள்ளது. இந்தியாவையே உலுக்கிய நிர்பயா வழக்கில் 17 வயது சிறுவனும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டான். அப்பொழுது கொடூரமான குற்றங்களைச் செய்யும் ஒரு சிலர் தங்களுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பதைக் காரணம் காட்டி தப்புவதைத் தடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்திருந்தது.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சிறார் நீதி சட்டத்தில் ஒரு முக்கிய திருத்தத்தைக் கொண்டு வந்தது. திருத்தப்பட்ட சட்டத்தின் 15 வது பிரிவில் கடும் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் 16 வயதைக் கடந்திருந்தால் அவர்கள் பெரியவர்களாகக் கருதி வழக்கை நடத்தலாம் எனத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் மது அருந்துவதற்குக் குறைந்தபட்சம் 25 வயதை அடைந்திருக்க வேண்டும். ஆனால் சிறுவன் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியதோடு ஓட்டுநர் உரிமம் கூட இல்லாமல் வாகனத்தை அதிவேகமாக இயக்கி இருவரின் உயிர் இழப்புக்குக் காரணமாகியுள்ளான். இது கொடூரமான குற்றம் என்பதால் சிறுவனை வயதுக்கு வந்த பெரியவராகக் கருதி வழக்கு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.