நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார் அமமுகவின் புகழேந்தி.
தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் வெளியேற காரணம்...
ஆளும் கட்சியான அதிமுக, மாவட்டச் செயலாளர்கள் மூலமாக அமமுகவில் இருப்பவர்களை ஆசைவார்த்தைகளை சொல்லி எப்படியாவது இழுக்க சொல்லுகிறது. சேர்மேன் பதவி, அந்த பதவி, இந்த பதவி தருவதாக கூப்பிட்டு வாருங்கள். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லுகிறது. இந்த தேர்தலில் அமமுக 3வது இடத்தை பிடித்துள்ளது. கூட்டணி அமைத்து ஆளும் கட்சி 12 சதவீதம் தான் பெற்றுள்ளது. கூட்டணி வைத்தும் 36 நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. 36 தொகுதிகளில் தோல்வியடைந்ததை மறைப்பதற்காக அமமுகவில் இருப்பவர்களை இழுக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபடுகிறது.
செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டமாக தினகரன் கிளம்பிவிட்டார். கட்சியைப் பலப்படுத்த பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள் நடத்த வேண்டும், அவரே கலந்து கொள்ள வேண்டிய மாவட்ட தலைநகர கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இவையெல்லாம் இனி நடக்கும். உள்ளாட்சித் தேர்தலில் இருந்து எங்களது பலத்தை பார்க்கலாம்.
உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டீர்களா?
விரைவில் புதிய நிர்வாகிகளை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் குறித்த பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. புதிய நிர்வாகிகள் அறிவிப்புக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் பணிகள் வேகமாக இருக்கும்.
அமமுகவை மக்கள் ஏற்கவில்லை என்கிறாரே தங்க தமிழ்செல்வன்...
தேர்தலில் தோல்வி, மக்கள் ஏற்கவில்லை என்று எத்தனைப் பேர் கட்சியை விட்டு ஓடியிருக்கிறார்கள். அந்த கட்சியில் ஏன் இவர் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தார். ஒரு கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளராக இருந்தவர், அதிமுகவில் உள்ள முதல் அமைச்சரை பாராட்டி பேசியிருக்கிறார். அதுதான் பிரச்சனையே.
சில கருத்துக்களை சொல்லும்போது தலைமை ஏற்கவில்லை. இடைத்தேர்தலில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம் என தங்க தமிழ்செல்வன் கூறியதாக தெரிவிக்கிறார்...
40 நாடாளுமன்றத் தொகுதியிலும் நிற்க வேண்டாம். இடைத்தேர்தலில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தங்க தமிழ்செல்வன் சொல்லவில்லை. அப்படியே சொல்லியிருந்தால் அவர் ஏன் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டிருக்க வேண்டியதுதானே. தேனி தொகுதியில் போட்டியிடுவதாக சொன்னது அவர்தான். சென்னையில் நடந்த அமமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஏன் அமைதியாக இருந்தார். அதன்பிறகு தினகரனை வீட்டில் சந்தித்துவிட்டு, ஏன் அமைதியாக ஊருக்கு போனார்.
தலைமைச் செயலகத்திற்கு முன்பு நின்று பேசும்போது முதல் அமைச்சரை பாராட்டுகிறார். யாரால் கட்சியை இழந்தோமோ, சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தோமோ, யாரை எதிர்த்து போராடுகிறோமோ, அந்த அரசை பாராட்டு பேசுவது என்ன நியாயம்? பிளாஸ்டிக் ஒழிப்பில் சாதனை புரிந்ததாக முதல் அமைச்சரே சொல்லவில்லை. அமைச்சர்களும் சொல்லவில்லை. எல்லோரும் சிரிக்கிறார்கள். ஒரு கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் இப்படி பேசலாமா?
தனது கவனத்திற்கு வராமலேயே தனது மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அதனால் கோபம் வரத்தானே செய்யும் என்கிறாரே தங்க தமிழ்செல்வன்...
முதல் அமைச்சரை பாராட்டி ஒரு கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் பேசியிருக்கிறார். அவரைப் பற்றி யாரிடம் புகார் கொடுப்பது என விவாதித்துள்ளனர். பின்னர் சென்னை வந்து தினகரனிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். இதில் என்ன தவறு.
தங்க தமிழ்செல்வன் பின்னால் யாரும் நிற்கவும் இல்லை. அவரது பின்னால் யாரும் வரவும் இல்லை. அவரை யாரும் இயக்கவும் இல்லை. எங்கே போவது என்று தெரியாமல் இந்த முடிவை எடுத்து தடுமாறிக்கொண்டிருக்கிறார். இதுதான் உண்மை. தன்னை யாரும் இயக்கவில்லை என்று அவர் சொல்வது உண்மைதான், நான் இல்லை என்று சொல்லவில்லை. ஒருவருமே தங்க தமிழ்செல்வனிடம் இல்லை. தனியாக நிற்கிறார். அவர் தவறாக போய்விட்டாரே என்று எனக்கு வருத்தம்தான்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சொல்கிறேன், இந்த அரசையும், முதல்வரையும் பாராட்டி பேசியதற்கு மன்னிப்பு கேட்டு, அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டால், தங்க தமிழ்செல்வன் தகாத வார்த்தையில் பேசியதை கூட அவர் (தினகரன்) மறந்துவிட்டு ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன். அதனை தங்க தமிழ்செல்வன்தான் முயற்சி செய்ய வேண்டும். அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டால் வேலை முடிந்துவிடும்.